பேராசிரியர் ஆ.சிவலிங்கனார்

பேராசிரியர் ஆ.சிவலிங்கனார்

Profession அறிஞர்

Biography

கடலூர் புது வண்டிப்பாளையம் கரையேற விட்டக் குப்பத்தில் ஆறுமுக முதலியார் – பொன்னம்மாள்
இணையர்க்கு 31.11. 1922 அன்று பிறந்தார். உள்ளூர் நகராட்சித் தொடக்கப் பள்ளியிலும்,
திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியாரடிகள் திருமடத்திலும் பள்ளிக் கல்வியைப்
பயின்று, திருவையாறு அரசர் கல்லூரியில் 1940-இல் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார்.

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளியில் 1941-42இல்
தமிழாசிரியராகப் பணியேற்றார். 1942-47இல் சென்னை ஸ்ரீமத் சிவஞான பாலைய சுவாமிகள்
தமிழ்க் கல்லூரியில் விரிவுரையாளராகவும், பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றிய
பின், 1972-73இல் சேலம், மோகனூர் சுப்பிரமணியம் தமிழ்க் கல்லூரியில் முதல்வராகப்
பணியாற்றி 1973-இல் பணி நிறைவு பெற்றார்.

1979-87இல் தொல்காப்பிய உரைவளம் வெளியீட்டுப் பணியில் ஈடுபட்டார். சென்னை உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மூலம் தொல்காப்பியச் சிறப்புப் பாயிர உரைவளம் தொடங்கி
பதினாறு நூல்களைப் பதிப்பித்துள்ளார்.

அ.சிவலிங்கனாரின் மனைவி திருமதி மங்களம். இவர்களுக்கு ஆறு மகன்களும், இரண்டு மகள்களும்
உள்ளனர்.

செந்தமிழ், தமிழ்ப்பொழில், செந்தமிழ்ச் செல்வி, வீரசைவ முரசு, தமிழ் மாருதம், மக்கள்
சிந்தனை போன்ற திங்கள் இதழ்களில் 200-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை
எழுதியுள்ளார்.

இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப்
பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில்
இலக்கண, இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளையும், ஆய்வுச் சொற் பொழிவுகளையும் வழங்கினார்.

உரை நூல்கள்-36, கவிதை நூல்கள் 8, ஆய்வு நூல்கள்- 8, திறனாய்வு நூல்கள்- 7, இலக்கண
நூல்கள்- 2, இலக்கண உரைநடை நூல்கள்- 27 ஆகியவற்றை எழுதியுள்ளார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்விக்குழு, ஆட்சிக்குழு உறுப்பினராகவும், 1998-இல் தமிழக
அரசு அமைத்த தமிழ் இலக்கண நூல் மீண்டும் உருவாக்கும் வல்லுநர் குழுவில் உறுப்பினர், தமிழக
புலவர் குழு உறுப்பினர், திருப்பத்தூர் தமிழ்ச்சங்க உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை ஏற்று
செயலாற்றினார்.

இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம் வழங்கிய ‘முதுபேராளர்’ விருது. இராசா
சர். அண்ணாமலைச் செட்டியார் விருது உள் ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

09.11.2014அன்று கதிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.