அகிலன்

அகிலன்

Profession எழுத்தாளர்

Biography

புதுக்கோட்டை பெருங்காளூரில் வைத்தியலிங்கம் – அமிர்தம் தம்பதியருக்கு 27.06.1922 அன்று
பிறந்தார். இயற்பெயர் அகிலாண்டம்.

16-வது வயதில் (1938) இவரது ‘அவன் ஏழை’ எனும் முதல் சிறுகதை பள்ளி இதழில் வெளி
வந்தது. பள்ளிப் பருவத்திலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார். இதனால் மேற்
கல்வியை உதறினார். 1940-களில் வெளிவந்த பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். தனி
மனிதஉணர்வுச் சிக்கல்களையும், சமூகப் பிரச்சனைகளையும் சிறு கதைகளாகவும் குறுநாவல்
களாகவும் எழுதினார்.

1944-இல் தட்டம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் ரயில்வே அஞ்சலகத்தில் பணியில் சேர்ந்து, பகுதி நேரமாக எழுத்துப் பணியைச் செய்ய
முடியாமல் அப்பணியை உதறி, 1958-இல் முழுநேர எழுத்தாளர் ஆனார். அதன் பிறகு, 1966-இல்
சென்னை அகில இந்திய வானொலியில் சொற்பொழிவுத்துறை அமைப்பாளர் பணியில் சேர்ந்து 1982-இல்
பணி நிறைவு பெற்றார். எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.

16 சமூகப் புதினங்கள், 3 வரலாற்றுப் புதினங்கள், 17 சிறுகதைத் தொகுதிகள், 3 சிறுவர்
நூல்கள், 3 பயண நூல்கள், 1 நாடகம், 2 கலை, 1 தன்வரலாறு, 1 தமிழாக்கம் ஆகியவை இவரது
நூல்கள்.

இவரது ‘நிலவினிலே’, ‘எரிமலை’, சக்திவேல்’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் தமிழ்நாடு
அரசின் பரிசுகளைப் பெற்றன. ‘காசுமரம்’, ‘மகிழம்பூ’, ‘பொங்கலோ பொங்கல்’ ஆகிய
சிறுகதைகள் தொலைக்காட்சி தொடராகின.

‘கலைமகள்’ இதழின் முதல் நாவல் போட்டியில் இவரது ‘பெண்’ணுக்கு முதல் பரிசு கிடைத்தது.
‘வேங்கையின் மைந்தன்’ சரித்திரநாவல் 1963-இல் ‘சாகித்ய அகாதெமி’ விருதைப் பெற்றது.
மேலும், நாடகமாகவும் அரங்கேறியது. ‘கயல்விழி’ 1964-65களில் தமிழ் வளர்ச்சித் துறையின்
சிறந்த நாவல் பரிசைப் பெற்றது. ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ திரைப்படமாகவும் வெளி
வந்தது. ‘சித்திரப்பாவை’ நாவல், தமிழுக்கு முதல் ஞானபீட விருதைப் பெற்றுத் தந்ததுடன்
ஆங்கிலம் மற்றும் பெரும்பாலான இந்திய மொழிகளில் புத்தகமாகவும், வானொலி, தொலைக்காட்சி
தொடராகவும் வெளிவந்தது. பல்கலைக் கழகங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் பாடநூலாகவும்
இடம்பெற்றிருந்தது. ‘பாவை விளக்கு’ நாவல் அதே பெயரிலும், ‘வாழ்வு எங்கே?’ நாவல்,
‘குலமகள் ராதை’ எனும் பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்தன. ‘எங்கே போகிறோம்?’
நாவலுக்கு 1973-இல் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது கிடைத்தது.

இவருடைய பல சிறுகதைகள் இந்திய மாநில மொழிகளிலும், ஆங்கிலம், ஜெர்மன், செக், ரஷ்யன்
மொழிகளிலும் வெளியாகி உள்ளன.

தமது 65-வது அகவையில் 31.1.1988-இல் இயற்கை எய்தினார்.