பண்டிதர் சச்சிதானந்தன்

பண்டிதர் சச்சிதானந்தன்

Profession அறிஞர்

Biography

யாழ்ப்பாணம் தும்பளையைச் சேர்ந்த கணபதிப் பிள்ளை-தெய்வானைப்பிள்ளை தம்பதியருக்கு
19.10.1921 அன்று பிறந்தார்.

காங்கேசன்துறை நடேஸ்வரர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், பருத்தித்துறை, சித்திவினாயகர்
வித்தியாலயம் மற்றும் ஹாட்லிக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றார். இலங்கை இந்தியா
இரு நாடுகளிலும் முதன்மைச்சித்தி மதுரைப் பண்டிதர் பட்டம் பெற்றார்.

1945-46இல் சுவாமி விபுலானந்தருக்கு ஆராய்ச்சித் துணை வராகவும், 1946-இல் கொழும்பு
செயிண்ட் மேரிஸ் கல்லூரியில் கணித ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழில் சிறப்புப்
பட்டம் பெற்றார்.

கந்தையா பரமேஸ்வரியை 26.08.1949 அன்று திருமணம் செய்துகொண்டார். ரவீந்திரநாதன்,
சாருகாசினி, மஞ்சுகாசினி, கணநாதன், பத்மாசனி, சிவநாதன், குகநாதன் ஆகியோர் இவரது
மக்கட் செல்வங்கள்.

1960-இல் பரமேஸ்வரா கல்லூரியில் கணித ஆசிரியராகவும், 1961-இல் யாழ் இந்துக்
கல்லூரியில் தமிழாசிரியராகவும், 1962- 65இல் யாழ். மத்தியக் கல்லூரி கணித
ஆசிரியராகவும், 1965-67இல் அரசினர் பாடநூற்சபையில் எழுத் தாளராகவும், 1967- 1981இல்
பலாலி ஆசிரியர் கலாசாலையில் உளவியற் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1978-இல்
லண்டனில் எம்.ஃபில் (மனோதத்துவம்) பட்டமும், 2001-இல் கலாநிதி பட்டமும் பெற்றார்.

பண்டிதர் சச்சிதானந்தம் 14 வயதில் கவிதை புனையும் ஆற்றலையும், 16 வயதில் பஞ்சாங்கக்
கணிப்பில் தேர்ந்தவராகவும் விளங்கினார்.

இவருடைய முதல் கவிதை ‘காதலியின் கையெழுத்து’ இந்திய ‘நவசக்தி’ சஞ்சிகையில்
வெளிவந்தது. இவருடைய முதல் கவிதைத் தொகுதி ‘ஆனந்தத் தேன்’ என்பதாகும்.

கவிதை, வரலாறு, ஆராய்ச்சி, சிறுவர் ஆகிய துறை சார்ந்த பத்து நூல்களை எழுதியுள்ளார்.
இலங்கையில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான சாகித்திய ரத்னா விருதை
1999-இல் பெற்றார். சம்பந்தன் விருது (2001), வடகீழ் மாகாண ஆளுநர் விருது (2003),
தந்தை செல்வா நினைவு விருது (2004), இலங்கை இலக்கியப் பேரவை விருது (2004),
கலாகீர்த்தி தேசிய விருது (2005), மேலும் கவிதையில் தேசிய அளவிலும், மாகாண
அளவிலும் பல விருது களைப் பெற்றுள்ளார். இவரது ‘யாழ்ப்பாணக் காவியம்’ நூல், சம்பந்தர்
விருது, வடக்கு கிழக்கு மாகாண இலக்கியப் பரிசு, இலங்கை சாகித்ய மண்டலப் பரிசு
ஆகியவற்றைப் பெற்றுள்ளது. ‘தமிழர் யாழியல்’ என்ற நூல் இலங்கை இலக் கியப் பேரவையின்
சிறந்த ஆய்வு நூலுக்கான விருதையும், பரிசையும் பெற்றது.

தனது 87-வது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக சிறிது காலம் யாழ், போதனா
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பலன ளிக்காத நிலையில் 21.03.2008 அன்று இயற்கை
எய்தினார்.