ஆ.வெ.ர.கிருஷ்ணசாமி

ஆ.வெ.ர.கிருஷ்ணசாமி

Profession எழுத்தாளர்

Biography

இலங்கை, நனோபா நகரில் ரெங்கசாமி ரெட்டியார் -சுப்பம்மாள் தம்பதியருக்கு 15.07.1918
அன்று கிருஷ்ணசாமி பிறந்தார். தந்தை 1920-இல் காலமானார். தாய் தனது மூன்று
குழந்தைகளுடன் 1923-இல் திருச்சி மாவட்டத்திலுள்ள ரெங்கநாதபுரத்தில் தன் தாய் வழிப்
பாட்டியுடன் வசிக்கத் தொடங்கினார்.

முசிறி போர்டு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது ‘கிராமஊழியன்’ பத்திரிகையை நடத்திய
பூர்ணம் பிள்ளை யிடத்தே நட்பு ஏற்பட்டது. 12-ஆவது வயதிலேயே கவி பாடும் திறன் பெற்றார்.

1935-இல் கிருஷ்ணம்மாளை இவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். அவர் 1939-இல் காலமானார்.
1940-இல் ராஜாமணியை மணந்தார். இவர் 1951-இல் இறந்தார். 1952-இல் ராஜம்மாளை மணந்தார்.
இம்மூவருக்கும் சுபாஷ்சந்திரன், பிரசன்னம், கண்ணன், குமரேசன் ஆகிய மகன்கள் பிறந்தனர்.

1935-இல் தேசப்பணியில் ஈடுபட்ட இவர், 1937-இல் காங்கிரஸ் கமிட்டி தலைவரானார்.
காமராஜரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுத்ததில் இவருக்குப் பங்களிப்பு உண்டு.
‘பாரதியார் நூற்றாண்டு விழா’ விழாக்குழு உறுப் பினராகச் செயலாற்றினார்.

1941-இல் இலங்கையில் இருந்த தனது தேயிலைத் தோட்டங்களை விற்று, தமிழகத்திற்கு வந்து
நிரந்தரமாகத் தங்கினார். எழுத்தாளர்களுக்காகவும், இலக்கியத்திற்காகவும் தன் செல்வங் களை
செலவு செய்தார். எண்ணற்ற எழுத்தாளர்களுக்கு சடையப்ப வள்ளலாய் திகழ்ந்தார்.

1941-இல் இவர்தம் 23-ஆம் வயதில் ரெங்கநாதபுரத்தில் 2 மாணவர்களைக் கொண்டு தொடங்கிய ஒரு
பள்ளி இப்போது 200 மாணவர்களையும், 8 ஆசிரியர்களையும் கொண்டு சிறப்பாக இயங்கி
வருகிறது. 1951-இல் ‘தமிழ் எழுத்தாளர் சங்க’த்தை நிறுவினார். தமிழ் எழுத்தாளர்கள்
மாநாடுகளில் இரு முறை பெரியார் கலந்து கொண்டார்.

திருச்சி உச்சிப் பிள்ளையார் கோயில் உட்பட பல கோயில்களை நிதி திரட்டிப் புதுப்பித்தார்.
ஸ்ரீரங்கம் கோபுரம் இன்று வானளாவ உயர்ந்து நிற்பதற்கு இவரும் காரணமானார். பழனி முருகன்
சிலையை மாற்றியமைத்தார்.

ஆதிசங்கரரின் ‘சௌந்தர்ய லஹரி’யையும், ‘சுப்பிரமணிய புஜங்க’த்தையும் தமிழாக்கம் செய்தார்.
காஞ்சி ஜெயேந்திர சுவாமிகளால் ‘கவிதாமணி’ உட்பட பல்வேறு அமைப்புகளின் பட்டங்களைப்
பெற்றுள்ளார்.

1958-இல் ‘எழுத்தாளன்’ பத்திரிகையைத் தொடங்கினார். ஆங்கிலத்திலும் வெளிவந்தது. சாகித்ய
அகாதமி, தமிழக அறநிலையத்துறை உயர்மட்டக் குழு, திருச்சி மாவட்ட அறங் காவலர் குழு
உட்பட ஏராளமான பணிகளை ஆற்றினார். 1975-இல் திருச்சி தமிழ்ச் சங்கமும், திருச்சி
எழுத்தாளர் சங்கமும் இணைந்து இவரது மணிவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடின.

1985-இல் ‘பிராஸ்டேட்’ நோய்க்காகவும், 1986-இல் குடலிறக்கத்திற்காகவும் அறுவை சிகிச்சை
செய்துகொண்டார். உடல்நலக் குறைவினால் 17.07.1989 அன்று காலமானார்.