| Profession | எழுத்தாளர் |
|---|
காஞ்சிபுரம் மாவட்டம், நாவலூர் கிராமத்தில் வேதாசலம் – ஜானகியம்மாள் தம்பதியருக்கு
22.09.1916 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் கோவிந்தன்.
வறுமையான குடும்பச் சூழலினால் நடுநிலைப் பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காமல், இலவச
இரவுப் பள்ளிக்குச் சென்று ஓரளவு கல்வியறிவு பெற்றார். பின்னர், ஓவியம் படிப்பதற்காக
சென்னை ஓவியக் கல்லூரிக்குச் சென்றார். பாதியிலேயே ‘ஜெமினி ஸ்டுடியோ’வில் ஓவியரானார்.
‘தமிழரசு’, ‘ஆனந்தபோதினி’, ‘ஆனந்த விகடன்’ ஆகிய அச்ச கங்களில் அச்சுக் கோர்ப்பாளராக
வேலை செய்தார். ஆனந்த விகடனில் வேலை செய்யும் போதுதான் கதைகள் எழுதத் தொடங்கினார்.
1939-இல் நீலாவதியைத் திருமணம் செய்துகொண்டார்.
‘கல்கி’ இதழில் அச்சுக்கோர்ப்பாளராக வேலை செய்யும்போது இவரது குட்டிக் கதை களை ‘பாப்பா
மலர்’ பகுதியில் ‘விந்தன்’ என்ற பெயரில் அதன் ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி)
வெளியிட்டு வந்தார். பின்னர், ஆசிரியர் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு மனைவி இறந்தார். அதன்பின் இரண்டாவது மனைவியாக
சரஸ்வதியை மணந்தார்.
விந்தனின் முதல் சிறுகதை நூல் ‘முல்லைக் கொடியாள்’ (1946) அப்போதுதான் தொடங்கப் பட்ட
‘தமிழ் வளர்ச்சிக் கழக’த்தின் முதல் பரிசைப் பெற்றது. 10 சிறுகதை நூல்கள், 6 புதினங்கள்,
2 குட்டிக் கதை நூல்கள், 4 கட்டுரைத் தொகுதிகள், 2 வாழ்க்கை வரலாறு, 2 சார்பு நூல்கள்
என 26 நூல்களை எழுதி யுள்ளார். விந்தன் படைப்புகளில் சத்திய ஆவேசமும், சமுதாய உணர்வும்
நிறைந்திருப்பதை உணரலாம்.
எம்.ஜி.ஆர். – சிவாஜி இணைந்து நடித்த ஒரே திரைப்படமான ‘கூண்டுக்கிளி’ உட்பட ஏழு
திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனமும், சில திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதி
யுள்ளார். ‘குலேபகாவலி’ திரைப் படத்தில் ‘மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ! போ!
இனிக்கும் இன்ப இரவே நீ வா! வா! வா!’ என்ற இவரது பாடல் இப்போதும் ஒலித்துக் கொண்டே
இருக்கிறது.
1954 ஆகஸ்டில் ‘மனிதன்’ என்றொரு இதழைத் தொடங்கினார். அவ்விதழ் ஒன்பது இதழ் களோடு நின்று
போனது. ‘புத்தகப் பூங்கா’ என்றொரு புத்தக வெளியீட்டகத்தை தொடங்கி சாண்டில்யன், இளங்கோவன்,
க.நா.சு., ஜெயகாந்தன் நூல்களை வெளியிட்டார்.
இறுதியாக, ‘தினமணி கதிர்’ ஆசிரியர் குழுவில் இணைந்து, அவ்விதழில் பல தொடர்களை
எழுதினார். அவற்றில் ‘எம்.ஆர்.இராதா சிறைச் சாலை சிந்தனைகள்’ முக்கியமானது.
30.06.1975 அன்று மாரடைப்பினால் காலமானார்.