| Profession | எழுத்தாளர் |
|---|
குமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழியில் 1914-இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை முறையாக
பள்ளிக் கூடத்தில் படித்தார். தன் முயற்சியில் தந்தையிடமிருந்து தமிழ் மருத்துவம், சோதிடம்
ஆகியவற்றையும் கற்றார். இதே காலகட்டத்தில் மலையாள மொழியையும் வாசிக்கக் கற்றுக் கொண்டார்.
1939-இல் இவருக்கும் மணிக்கட்டிப் பொட்டலைச் சார்ந்த ஆசிரியர் சிவ பொன்னீலவடிவுக்கும்
திருமணம் நடைபெற்றது. அதன்பின், கணவர் ஊரான மணிகட்டிப் பொட்டலில் வாழத் தொடங்கினார்.
பின்னர் இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுக் கொண்டார்.
அழகிய நாயகி அம்மாளின் மகன் முற்போக்கு எழுத்தாளர் பொன்னீலன் என்பது குறிப்பிடத்தக்கது.
மகனின் தூண்டுதலால் இவர் தமிழிலக்கிய நூல்களை வாசிக்கத் தொடங்கினார். அந்த வாசிப்பின்
விளைவாக தன் வாழ்க்கையையும் கதையாக எழுதலாமே என்கிற எண்ணம் அவருக்குள் உதயமாகிறது.
தன் எண்ணத்தை மகன் பொன்னீலனிடம் கூறு கிறார். பொன்னீலன் எழுதச் சொல்லி தாயாரை
உற்சாகப்படுத்துகிறார்.
அழகிய நாயகி அம்மாள் தன் குடும்ப வரலாற்றை எழுத்தில் வடிக்கத் தொடங்கினார். இந்த வரலாறு
பெண்ணின் பார்வையில் நிகழ்த்தப்பட்ட பதிவு. ஆகவே அது கண்ணீர் நிறைந்ததாகவே அமைந்தது.
எனவே அது ‘கவலை’ என்னும் பெயர் பெற்றது. ‘கவலை’ முழுமையிலும் ஆண்களே வாழ்வில்
முடிவெடுப்பவர்களாக விளங்குகிறார்கள். ஆனால், அம் முடிவுகளால் விழையும் துன்பங்களை
அனுபவிக்கும் நிலையில் பெண்கள் இருக்கின்றனர்.
தன் குடும்பத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் தகவலாகப் பதிவு செய்யாமல், அந்
நிகழ்வுகளை முன் நிறுத்தி ஒரு விசாரணையை நிகழ்த்தி விடுவதையே வழக்கமாகக் கொண்
டுள்ளார். அப்படியான விசாரணையில் புலனாகும் மதிப்பீடுகள் ஒரு சமூகத்தின் காலம் சார்ந்த
மதிப்பீடாகவே அமைந்து விடுகிறது.
‘கவலை’ புதினத்தில் உணர்த்தப்படும் காலம் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 20-ஆம்
நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ள வேண்டும். 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் இப்பெண் தன்
மொழியில் பதிவு செய்துள்ளார். ‘கவலை’ நாவல் முழுமையிலும் காலம் வேக மாக
நகர்ந்துகொண்டிருக்கிறது. இந்த கால நகர்தல் சமூக மாறுதல்களில் பிரதிபலிக்கிறது.
அழகிய நாயகி அம்மாள் ஒரு குடும்பத்தின் வரலாற்றைச் சொல்வதின் ஊடாகச் சமூகத்தின் ஒரு
குறிப்பிட்ட காலகட்டத்தையும் உணர்த்தி வருகிறார்.
‘கவலை’ 1998-இல் வெளியானது. அழகிய நாயகி அம்மாள் 2001 மார்ச் 27ஆம் நாள் கால
மானார். அழகிய நாயகி அம்மாள் பெற்ற பொன்னீலனை காலம் மறந்துவிட்டாலும் அழகிய நாயகி
அம்மாளை அது ஒருபோதும் மறக்காது.
ஏனெனில் இளங்கோவைப் போல் ஒரு புதிய மரபைத் தோற்றுவித்த பெருமை அவருடையது.