தேவன் (ஆர்.மகாதேவன்)

தேவன் (ஆர்.மகாதேவன்)

Profession எழுத்தாளர்

Biography

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள திருவிடைமருதூரில் 8.9.1913 பிறந்தார்.
அருகிலுள்ள திருவாவடுதுறை ஆதின உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது பள்ளி சாரணர்
படையில் சேர்ந்திருந் திருந்தார். சாரணப் படைத்தலைவராக இருந்த கோபால்சாமி,
மாணவர்களுக்கு பல சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்
பார். அவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். சிறிது காலம் பள்ளி
ஆசிரியராகப் பணியாற்றினார்.

21-ஆவது வயதில் ‘ஆனந்த விகடன்’ இதழில் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். இருபத்துமூன்று
ஆண்டு காலம் அவ்விதழில் பணியாற்றினார். அக் காலத்தில் ஐநூறுக்கும் அதிகமான சிறுகதைகள்,
நூற்றுக் கணக்கான நகைச்சுவைக் கட்டுரைகள், நாவல்கள் எழுதினார்.

இவை ஐம்பதுக்கும் மேற் பட்ட புத்தகங்களாக வெளிவந்துள்ளன. நகைச்சுவையாக எழுதிய
படைப்புகள் பெரும்பாலும் பிற மொழிகளிலும் வெளிவந்துள்ளன.

‘கல்கி’க்குப் பிறகு திறம்படவும், தரம் குறையாமலும் ஆனந்த விகடன் இதழைப் பொறுப்பேற்று
நடத்திய சிறப்புக்குரியவர்.

எழுத்தில் பல்வேறு உத்திகளை கையாண்டார். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும்
ஒவ்வொரு ரகம். இவருடைய சமூகப் படைப்புகளில் வாழ்க்கையில் நடக்கும் உண்மை நிகழ்ச்சிகளை
அப்படியே காட்சிப்படுத்தி இருக்கிறார். இவரின் நாவல்கள் ‘ஆனந்த விகடன்’ இதழில்
தொடர்கதையாக வெளியான காலகட்டத்தில் துப்பறியும் சாம்பு, ஜஸ்டிஸ் ஜகந்நாதன், சி.ஐ.டி.
சந்துரு, கோமதியின் காதலன், கல்யாணி, மிஸ் ஜானகி ஆகியவற்றை முதலில் படிப்பதற்காக
குடும்பத்துக்குள் நடந்த சண்டைளை அக்கால வாசகர்களால் மறக்க முடியாது.

இவரை ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்று பாராட்டினார்கள். ‘துப்பறியும் சாம்பு’ இவரது
பிரபலமான நகைச்சுவையும் ஆராய்ச்சியும் கலந்த பாத்திரப் படைப்பு. இது தொலைக்காட்சித்
தொடராக வெளியானது. ‘மிஸ்டர் வேதாந்தம்’, ‘ஸ்ரீமான் சுதர்சனம்’ ஆகிய இவ்விரு நாவல்களும்
இயக்குநர் ஸ்ரீதர் தயாரிப்பில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின. ‘கோமதி யின் காதலன்’
திரைப்படமாக வெளிவந்துள்ளது. இவர் எழுதிய நாடகங்களில் சில அரங்கேறின.

5.5.1957-இல் தனது 43-ஆவது வயதில் இயற்கை எய்தினார். தேவன் அமரராகி 60 ஆண்டுகள் ஆன
பின்னரும், அவருடைய எழுத்துகள் தொடர்ந்து வாசிக்கப்படுகின்றன என்றால், அதற்கு முக்கிய
காரணம், அவருடைய கதைகளில் அவர் ஆபாசத்தைக் கையாள வில்லை, அரசியலை நுழைக்கவில்லை
என்பது தான். காலத்தால் அழிக்க முடியாத எழுத்தாளர் தேவன் (என்கிற) ஆர்.மகாதேவன்.