மூதறிஞர் அடிகளாசிரியர்

மூதறிஞர் அடிகளாசிரியர்

Profession அறிஞர்

Biography

விழுப்புரம் மாவட்டம், கூகையூரில், பெரியசாமி அய்யர் – குங்கும அம்மாள் தம்பதியருக்கு
17.4.1910 அன்று பிறந்தார். இயற்பெயர்: குருசாமி அய்யர்.

பெரியசாமி அய்யர் தன் மகன் படிப்பதற்காகவே தனது வீட்டில் தொடங்கிய பள்ளியில் ஐவருடன்
பயின்றனர். இவரது ஏழாம் வயதில் தந்தையார் காலமானார். அதன்பின் அவ்வூரிலுள்ள தொடக்கப்
பள்ளிக்குச் சென்று மூன்றாம் வகுப்பு வரையே படித்தார். அதன்பின்தாய்மாமன் ஊரான
நெடுவாசலுக்குச் சென்றனர்.

25 வயது நிரம்பியவர்கள் புலவர் பட்டம் பெறலாம் என்ற அக்கால விதிப்படி 25 வயது வரை
காத்திருந்து தனியாகத் தேர்வு எழுதி புலவர் பட்டம் பெற்றார். 1941 ஜூலையில் ஸ்ரீமத்
பாலய்யா சுவாமிகள் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்து, கல்லூரித்
துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 1950 – 1970 இருபது ஆண்டு காலம் தஞ்சாவூர்
கரந்தைப் புலவர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும் துணைத்தலைவராகவும் பணியாற்றி
நிறைவு பெற்றார்.

பணி நிறைவு பெற்றபின் தம் சொந்த ஊராகிய குகையூருக்குக் குடும்பத்தை மாற்றிக் கொண்டார்.
பின்னர் சேலம் மாவட்டம், ஆத்தூர் கருணாநிதி தமிழ்க் கல்லூரியில் கல்லூரித் தலைவராக 1971-
1973இல் பணியாற்றினார். 1977-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர்
சி.பாலசுப்பிரமணியம் தலைமையில் ஓராண்டு ‘தமிழ்த் திறனாய்வு’ என்ற தலைப்பில்
பணியாற்றினார்.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சுவடி புலத்தில் 1982-1985இல் சிறப்பு நிலை இணைப்
பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் தொல்காப்பியம் முழுமைக்கும் உரைக்குறிப்பு எழுதித்
தொல்காப்பியத்தை பதிப்பித்தார்.

செம்மொழித் தமிழாய்வு குறுந்திட்ட ஆய்வுப் பணியின் கீழ் மூதறிஞர் அடிகளாசிரியரை 102
-ஆவது அகவையிலும் ஆய்வாளராகத் தேர்ந்தெடுத்து ஓராண்டு ‘தொல்காப்பிய ஆய்வு’ நடத்த ஆணை
பிறப்பிக்கப்பட்டு அதற்காக 2,50,000 ரூபாயும் அளிக்கப்பட்டது. இவ்வாய்வை 31.12.2011-இல்
நிறைவு செய்தார். ஒரு வார காலத்தில் அதாவது 08.01.2012 அன்று காலமானார்.

உரை நூல்கள்- 26, பதிப்புகள்- 7, படைப் பிலக்கியம் – 29, இலக்கணம்- 6 உட்பட 68 நூல்களை
படைத்துள்ளார். ‘திருமூலரும் பேரு ரையும்’ எனும் நூலுக்காக தமிழ் வளர்ச்சித் துறையின்
(1998) சிறந்த நூலுக்கான முதல் பரிசைப் பெற்றார். இவரது படைப்புகளை ஆய்வு செய்து 4
ஆய்வாளர்கள் முனைவர் பட்டமும், 8 ஆய்வாளர்கள் இளம் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் இந்திய குடியரசுத் தலைவரின் ரூ. 5 லட்சம்
பொற்கிழியுடன் கூடிய தொல்காப்பியர் விருது உட்பட பல விருதுகளை தாம் வாழும்
காலத்திலேயே பெற்று நிறைவான வாழ்வு வாழ்ந்தார்.