| Profession | அறிஞர் |
|---|
கும்பகோணம் அமிர்தலிங்கம்-தையல்நாயகி இணையர்க்கு 3.4.1907 அன்று பிறந்தார்.
குடந்தை ஆடவர் கல்லூரியில் பி.ஏ. பயின்று தமிழில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத்
தேர்ச்சி பெற்று, ‘ஜி.யூ. போப், பிராங்க்ளின்’ தங்கப் பதக்கம் பெற்றார்.
1928-ல் சென்னைப் பல்கலைக்கழக எழுத்தராகவும், பிறகு தலைமைச் செயலகத்தில் எழுத்தராகவும்
பணியாற்றினார். துறைத் தேர்வுகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சென்னை அரசு
முகமதியக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார். 3 ஆண்டு களுக்குப் பிறகு
பாலக்காடு அரசினர் கலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றத் தொடங்கினார்.
30.06.1933-இல் திருமணம். ஓவியக் கலை வல்லுநரும், திருமணத்திற்குப் பிறகு வேலையை
துறந்து, முழுநேர மாணவராக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுநிலைக் கல்வி கற்றார்.
அப்போது ‘தமிழ்ப் பேரவை’த் தலைவராகவும், ‘சமூக சீர்திருத்தச் சங்க’த் தலைவராகவும்
செயற்பட்டார். அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்தார்.
அண்ணல் காந்தி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்தியபோது, வரவேற்பு இதழைத்
தமிழில் அச்சடித்து வாசித்தார்.
1935-இல் எம்.ஏ. பட்டம் பெற்று, சென்னை அரசு கல்லூரியில் விரிவுரையாளரானார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் அழைப்பை ஏற்று அப்பல்கலைக் கழக தமிழியல் துறையில்
பணியாற்றினர். இடையில், ஆய்வேடு அளித்து 1942-இல் ‘முதல் முனைவர் பட்டம்’ பெற்றார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறுப்பு துணைவேந்தராக இரு முறை பணி யாற்றியுள்ளார்.
1965-இல் மதுரை தியாகராசர் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்ற சிதம்பர நாதன்
22.11.1967-இல் இயற்கை எய்தினார்.
1958, 1964 – இருமுறை தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகப் பணியாற்றினார்.
அப்போது ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றத்தை வழி மொழிந்து உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.
இவரது ஆய்வுக்கட்டுரைகள் ‘நியூ இந்தியன் ஏண்டிக்குயரி’ (பூனா), ‘இந்திய மொழிக்குழு’
(கல்கத்தா), ‘தமிழ்ப்பண்பாடு’ (தூத்துக்குடி), ‘கீழ்த் திசை’ (சென்னை) போன்ற இதழ்களில்
வெளி வந்தன. ‘மாதவமணி’, ‘பிரசண்ட விகடன்’, ‘கதைக் கோவை’ ஆகியவற்றில் இவரது கதைகள்
வெளியாயின. 22 நூல்களின் ஆசிரியர்.
பல்கலைக் கழகங்களிலும், தமிழறிஞர் இயக்கங்களிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட
செயலாற்றினார்.
இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து,
எகிப்து, ரஷ்யா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து சில பயணக் கட்டுரைகளை எழுதினார்.
தருமபுர ஆதினம் 1955-இல் ‘செந்தமிழ்க் காவலர்’ என்ற விருது அளித்து சிறப்பித்தார்.