சி.பா.ஆதித்தனார்

சி.பா.ஆதித்தனார்

Profession பத்திரிக்கையாளர்

Biography

நெல்லை மாவட்டம், காயாமொழி கிராமத்தில் சிவந்தி ஆதித் தனார் – கனகம் அம்மையார்
தம்பதியருக்கு 27.9.1905 அன்று பிறந்தார். இயற்பெயர் பாலசுப்பிரமணிய ஆதித்தன்.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள பள்ளியில் தொடக்கக் கல்வியையும், திருச்சி புனித ஜோசப் கல்லூரியில்
மேல்படிப்பையும் கற்றார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் தனக்குக் கொடுக்கப் பட்ட பணத்தைச்
சேமித்து மிகவும் எளிமையாக ‘ஆர்ட் புக் கம்பெனி’ எனும் நூல் வெளியீட்டு நிறுவனத்தை
தொடங்கி சிறு நூல்களை வெளியிட்டார்.

இயற்பியலில் எம்.ஏ. பட்டம் பெற்று, பின்னர் ஐ.சி.எஸ். தேர்வு எழுதும் பொருட்டு இலண்டன்
சென்றார். அங்கு சட்டம், பொருளாதாரம் பயின்றார்.

பின்னர் 1938இல் தமது 28ஆவது வயதில் வழக்கறிஞர் தேர்வில் ‘பாரிஸ்டர்’ பட்டம் பெற்றார்.
அங்கிருந்து, சிங்கப்பூர் சென்று, சுயமரியாதை இயக்கம் வளரப் பெரிதும் காரணமாக இருந்த
செல்வந்தர் இராமசாமி நாடார் மகள் கோவிந்தம்மாளை 1.9.1933 அன்று திருமணம் செய்தார்.
சிங்கப்பூரில் சில ஆண்டுகள் பணி செய்து தமிழகம் திரும்பினார்.

‘தந்தி’ நாளிதழை 01.11.1942 அன்று மதுரையில் தொடங்கினார். இரண்டாம் உலகப் போரின்
போது காகிதப்பற்றாக் குறையின் காரணமாக வைக்கோலைப் பதப்படுத்தி கூழாக்கி ‘நாட்டுக்
காகிதம்’ செய்தார். செய்தித்தாளில் ‘நாட்டுக் காகிதத்தால் அச்சிடப்பட்டது’ என்று
குறிப்பிட்டார். இதற்காக அரியநாயகிபுரத்தில் ‘ஆதவன் தாள் ஆலை’யை நிறுவினார். ‘மதுரை
முரசு’, ‘தமிழன்’ ஆகிய இதழ்களை நடத்தினார்.

‘நாம் தமிழர் இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். 1965-இல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்
கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னரும் சிறைத் தண்டனைகளைப் பெற்று
விடுதலை ஆனார்.

1947 முதல் 1953 வரை மேலவை உறுப்பினர் ஆனார். 1957-இல் சாத்தான்குளம் சட்டப் பேரவை
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பெற்றார். 1964-இல் மேலவை உறுப்பினர் ஆனார். 1967-இல்
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், சபாநாயகர் ஆனார்.
‘தமிழ்நாடு சட்டப் பேரவை நடைமுறை விதிகள்’ எனும் நூலை எழுதினார். அண்ணாவின்
ஆலோசனையை ஏற்று 12.08.1968 அன்று அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு மு.கருணாநிதியை முதலமைச்சராகக் கொண்ட அமைச்சரவையில்
கூட்டுறவு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சரானார்.

24.5.1981 அன்று காலமானார். ஆதித்தனாரின் மகன் சமீபத்தில் காலம் சென்ற சிவந்தி
ஆதித்தனார் ஏற்படுத்திய ‘ஆதித்தனார் இலக்கியப் பரிசு’ மூலமாக ஆண்டுதோறும் சிறந்த
எழுத்தாளர் ஒருவருக்கு ரூ. 50,000 பரிசும், மூத்த தமிழறிஞருக்கு ரூ.1,00,000
(தற்போது ஒன்றரை லட்சம்) பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.