| Profession | சமயம் |
|---|
ஈழத்து மட்டக்களப்பு மாகாணத்தின் காரைத்தீவு எனுமிடத்தில் சாமித்தம்பி – கண்ணம்மை இணையரின்
மகனாக மயில்வாகனன் பிறந்தார்.
1908-இல், அவர்தம் 16-ஆம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் புலமைத் தேர்வில்
தேர்ச்சியடைந்து, அதே கல்லூரியில் 1909-இல் ஆசிரியராகப் பணியேற்றார். 1911-இல் கல்முனை
கத்தோலிக்க மிஷன் பாடசாலையில் ஆசிரியப் பணியில் அமர்ந்தார். அதே ஆண்டு கொழும்பிலுள்ள
ஆசிரியர் கல்லூரியில் பயிற்சி பெற்று 1913-இல் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில்
ஆசிரியராகப் பணியாற்றினார். 1915-16இல் இலங்கை அரசினர் தொழில் நுட்பக் கல்லூரியில்
அறிவியல் பிரிவில் பயின்று தேர்ச்சி பெற்றார். 1916-இல் ஈழத்திலேயே முதலாவதாக மதுரை
தமிழ்ச் சங்கப் பண்டிதர் தேர்வில் தேர்ச்சி அடைந்தார்.
1917 முதல் கொழும்பு அரசினர் கல்லூரி, யாழ்ப்பாணம் தூய பற்ரீசியார் கல்லூரி ஆகியவற்றில்
விஞ்ஞான விரிவுரையாளராகப் பணியாற்றினார். இலண்டன் பல்கலைக் கழகம் நடத்திய பி.எஸ்.சி.,
தேர்வில் தேர்ச்சியடைந்தார். மாணிப்பாய் இந்துக் கல்லூரியின் தலைமையாசிரியராக (1920-22)
பணியாற்றினார்.
தமது நண்பர் திருவிளங்கத்தின் மறைவால் பெருந்துயருற்றிருந்த அடிகளார் சென்னை சென்று
இராமகிருஷ்ண மடத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். அங்கு ‘பிரபோத சைதன்யா’ என்ற பெயரைச்
சூட்டினர். ஸ்ரீ இராமகிருஷ்ண விஜயம் (தமிழ்), வேதாந்த கேசரி (ஆங்கிலம்) ஆகியவற்றின்
ஆசிரியராகப் பணியாற்றினார். 1925-இல் இலங்கையில் பல ஊர் களுக்குச் சென்று
சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். 1926-இல் வண்ணார் பண்ணையிலுள்ள வைத்தீஸ்வரர் வித்தியாலயம்,
விவேகானந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளை நடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
1931-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைமைப் பேராசிரியரானார். 1943-இல்
இலங்கைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரானார். அடிகளாரைப் பாராட்டி கொழும்பு
நகர மண்டபத்தில் பெருவிழா நிகழ்த்தப்பட்டது.
அடிகளார் ‘மதங்கசூளாமணி’, ‘யாழ்நூல்’, ‘நடராஜ வடிவம்’, ‘நாவலர் நான்மணி மாளிகை’
ஆகிய நூல்களை இயற்றினார். விவேகானந்தரின் ‘ஞானதீபம்’, ‘கர்மயோகம்’, ‘ஞானயோகம்’, ‘விவே
கானந்த சம்பாசனை’, ‘நம்மவர் நாட்டு ஞான வாழ்க்கை’ ஆகியவற்றை மொழிபெயர்த்துள்ளார். நவநீத
கிருஷ்ண பாரதியார் எழுதிய ‘உலகியல் விளக்கம்’ எனும் நூலை பதிப்பித்துள்ளார்.
1934-இல் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் 22-ஆம் ஆண்டு விழா, 1935-இல் திருவண்ணாமலையில் ‘சைவ
சித்தாந்த சமாஜ’த்தின் 30-ஆம் ஆண்டு விழா,1936-இல் பச்சையப்பன் கல்லூரியில் ‘கலைச்
சொல்லாக்க மாநாடு’, 1939-இல் கல்முனையில் ஆசிரியர் விடுமுறைக் கழக மாநாடு, 1942-இல்
மதுரையில் ‘முத்தமிழ் மாநாடு’ ஆகியவற்றில் தலைமை தாங்கினார்.
19.07.1947 அன்று கொழும்பு மாநகரில் வீடேகினார்.