| Profession | அறிஞர் |
|---|
கோவையில், மருதாசலம் செட்டியார் – கோனம்மாள் தம்பதியருக்கு 30.11.1888 அன்று
பிறந்தார். இயற்பெயர்: இராமச்சந்திரன்.
கோவை நகரமன்றத் தொடக்கப் பள்ளியிலும், கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக்
கல்வியைப் பயின்றார். சென்னையிலுள்ள இராஜதானி கல்லூரி (மாநிலக் கல்லூரி)யில் 1908-இல்
பி.ஏ. பட்டம் பெற் றார். 1912-இல் பி.எல். பட்டம் பெற்றார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, வடமொழி, உருது, ஆங்கிலம் ஆகிய எட்டு
மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தி மொழியில் துளசிதாசர் எழுதிய அருள்வாக்கையும்,
கபீர்தாசர் பாடல்களையும் மொழிபெயர்த்தார். வட மொழியில் அமைந்த கடோபநிடதத்தை மொழி
பெயர்த்தார்.
தனது 55-வது வயதில் திருக்குரானைப் படிப்பதற்காக உருது மொழியைக் கற்றார்.
இவரது நூல்கள் 12 செய்யுள், 41 உரைநடை, 5 நாடகம், 6 வாழ்க்கை வரலாறு, 6 மாநாட்டு
உரை ஆகியனவாகும்.
1918-இல் கோவை நகரமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நகர மன்ற உறுப்பினர் ஆனார். தஞ்சை
சரசுவதி மகால் நூலகத்தின் உறுப்பின ராக இருந்த கோவைகிழார் 1950-இல் ‘இராமப் பய்யன்
அம்மானை’ நூலைப் பதிப்பித்தார். சென்னை அரசாங்க கையெழுத்தப் புத்தகச்சாலையில்
உறுப்பினராய் இருந்து சோழன் பூர்வப் பட்டயம், கொங்கு தேச ராஜாக்கள், பேரூர்க் கோவை ஆகிய
நூல்களைச் சிறந்த முறையில் பதிப்பித்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மூலமாக
‘தமிழிசைக் கருவிகள்’ என்னும் அரிய நூலைப் பதிப்பித்தார். கல்வெட்டு, புவியியல்
தொடர்பான பல்துறைப் புலமைப் பெற்றவராகவும் விளங்கினார்.
1907-இல் பி.ஏ. படித்துக்கொண்டிருந்தபோது செல்லம்மாளை இல்வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.
இவர்களுக்கு ஒரு மகளும், ஐந்து மகன்களும்.
இவரது சேவையைப் பாராட்டி ஆங்கிலேய அரசு 1930-இல் ‘ராவ் சாகேப்’ பட்டத்தையும்,
1938-இல் ‘ராவ் பகதூர்’ பட்டத்தையும் அளித்து சிறப்பித்தது. இலண்டன் பட்டத்தை வழங்கியது.
சென்னை மாநிலத் தமிழ்ச் சங்கம் ‘சித்தாந்தப் புலவர்’ விருதையும், மதுரை ஆதீனம்
‘சைவஞாயிறு’ விருதையும் கொடுத்துச் சிறப்பித்தன. 1958-இல் பொள்ளாச்சியில் நடைபெற்ற
தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இவருக்குப் பொற்பதக்கம் வழங்கப்பட்டது. சென்னை மாநிலத் தமிழ்க்
கழகம் ‘செந்தமிழ்ப் புரவலர்’ பட்டத்தை வழங்கியது.
கோவை கிழார் தம் வாழ்நாள் எல்லாம் திருநாவுக்கரசரைப் போல் ‘என் கடன் பணி செய்து
கிடப்பதே’ என வாழ்ந்து, அவரைப் போலவே 81-ஆம் வயதில் 03.12.1969 அன்று இறைவனடி
சேர்ந்தார்.