| Profession | அறிஞர் |
|---|
திருநெல்வேலியில், காந்திமதிநாதப் பிள்ளைக்கும் மீனாட்சி அம்மையாருக்கும் 05.01.1888
அன்று பிறந்தார். மூன்றாண்டுகள் திண்ணைப் பள்ளியில் கற்றார். நான்காம் வகுப்பில் பள்ளியில்
முதல்வராகவும், ஏழாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல்வராகவும் தேறினார். 1906-இல் நடை
பெற்ற பல்கலைக்கழகத் தேர்விலும் முதல் பரிசு பெற்றார்.
சென்னை மாநிலக் கல்லூரி யில் பி.ஏ. (வரலாறு) பட்டம் பெற்றார். 1910-இல் முதன்மையாக
வென்று பவல்மூர்கெட் என்ற பெரியார் அமைத்த ‘தமிழாராய்ச்சிப் பரிசு’ பெற்றார். 1913-இல்
ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்.,
எம்.எல். பட்டங்களைப் பெற்றார்.
திருநெல்வேலி பிரமு அம்மையாரை திருமணம் செய்துகொண்டார். 1920-இல் கல்கத்தா
பல்கலைக்கழகம் அகில இந்திய அளவில் நடத்திய கட்டுரைப் போட் டியில் இவர்தம் ‘குற்றவியலின்
நெறிமுறைகள்’ கட்டுரைக்கு 15,000 பரிசுடன் ‘தாகூர் சட்ட விரிவுரையாளர்’ விருது
பெற்று உலகப் புகழ்ப் பெற்றார்.
வழக்கறிஞராகப் பணிபுரிய விருப்பமில்லாமல் சட்டக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில்
சேர்ந்தார். அப்போது இவர் மைலாப்பூரில் வசித்து வந்தார். ‘திருவள்ளுவர் கழகம்’ உருவாக்கி
அதன் தலைவராகப் பணியாற்றி மகிழ்ந்தார். நீதிபதி சதாசிவ ஐயர் இவரை அடிக்கடி சந்தித்துப்
பேசுவார். சென்னைக்கு வந்த இரவீந் திரநாத் தாகூர் கா.சு.பிள்ளையின் பெருமை அறிந்து,
அவரைத் தேடிச் சென்று அளவளாவி, ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
1920-இல் சட்டக் கல்லூரிப் பேராசிரியர் பணியிலிருந்து விலகினார். 1927- 29
திருநெல்வேலியில் தங்கி எழுதியும், பேசியும் தமிழ்த் தொண்டிலும் சைவ சமயத் தொண்டிலும்
ஈடுபட்டு பேரும் புகழும் பெற்றார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரா
சிரியராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் ஈழம் சென்று தமிழ்ப் பணியாற்றித்
திரும்பினார்.
மீண்டும் திருநெல்வேலி சென்று நகராட்சி உறுப்பினரானார். நெல்லையப்பர் கோயில்
அறங்காவலரானார். இவர் காலத்தில் தோற்றுவித்த தேவாரப் பாடசாலை இன்றும் நடந்து வருகிறது.
கா.சு.பிள்ளை உரை நூல்கள், வரலாற்று நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், கதைகள், சமய நூல்கள்,
அறிவுச்சுடர் நூல்கள், கலை நூல்கள், பதிப்பு நூல்கள், ஆங்கில மொழிபெயர்ப்புகள், ஆங்கில
நூல்கள், சட்ட நூல்கள், கட்டுரைகள் என 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
1944-இல் இவரது உடல்நிலை குன்றியது. உரைவேந்தர் அவ்வை துரைசாமி இவரை நெல்லைக்கு
அழைத்துச் சென்றார். ஓராண்டு மருத்துவ சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் 30.04.1945 அன்று
இறைவனடி சேர்ந்தார்.