கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம்

கரந்தைக் கவியரசு அரங்க.வேங்கடாசலம்

Profession அறிஞர்

Biography

தஞ்சாவூர் மாவட்டம், மோகனூர் கிராமத்தில் அரங்கசாமி பிள்ளை – தருமாம்பாள் தம்பதியருக்கு
1886 மார்கழித் 5-ஆம் நாள் பிறந்தார்.

திண்ணைப் பள்ளிக்குப் பின், தூய பேதுரு கல்வி நிலை யத்தில் பள்ளிக் கல்வியைப் பயின்றார்.
அப்போது இவருக்கு நெருங்கிய நண்பராக விளங்கியவர், பின்னாளில் கரந்தை தமிழ்ச் சங்கத்தை
நிறுவிய த.வே.இராதாகிருஷ்ணன். இங்கு தமிழாசிரியராகப் பணியாற்றிய ‘குயிலையா’
ஆர்.சுப்பிரமணிய அய்யர் இவருக்கு தமிழ்ப் பாடல்களோடு தமிழுணர்வையும் சேர்த்தே ஊட்டினார்.

தமது 24-ஆம் வயதில் (1910) தனது தமிழாசிரியருக்குத் தான் செலுத்தும் குருதட்சணையாக
‘ஆசானாற்றுப்படை’ எனும் நூலைப் படைத்தார். இந்நூலை த.வே. இராதாகிருஷ்ணன் தனது
பதிப்புரையுடன் வெளியிட்டார்.

அரங்க.வேங்கடாசலம் பிள்ளையின் துணைவியார் மங்களத்தம்மை ஆவார். இவர் களுக்கு ஓர் ஆண்
பிறந்தது. அக்குழந்தைக்கு ஆசிரியரின் ‘சுப்பிரமணியம்’ எனும் பெயரையே சூட்டினார்.

மங்களத்தம்மாள் இளம் வயதிலேயே இறந்து விட, செகதாம்பாள் என்பவரை மணந்து கொண்டார். முதல்
மனைவியைத் தொடர்ந்து தந்தையும் இறைவனடி சேரவே, கவியரசர் தந்தையின் உழவுத் தொழிலை
மேற்கொண்டார்.

மோகனூர் கணக்குப்பிள்ளையாகவும், மணியக் காரராகவும் பல காலம் பணியாற்றினார். பின்னர்
கோனார்பட்டு என்னும் ஊரில் தலைமை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

இக்காலகட்டத்தில் பண்டிதமணி கதிரேசன் செட்டியார், உ.வே.சாமிநாத அய்யர், மகா வித்வான்
ரா.இராகவ அய்யங்கார், சோழ வந்தான் அரசஞ்.சண்முகனார், மு.இராகவ அய்யங்கார், அனந்தராம ஐயர்
போன்ற பெரும் புலவர்களின் நட்பு கிடைத்தது. சன்மார்க்க சங்கம் முதலான பல சங்கங்களில்
சொற்பொழி வாற்றும் வாய்ப்புகள் கிடைத்தன.

கரந்தை தமிழ்ச் சங்கத்தின் முதல் செயலா ளராக அரங்க. வேங்கடாசலம் பிள்ளை தேர்ந் தெடுக்கப்
பெற்றார். 1920-இல் செந்தமிழ்க் கைத்தொழில் கல்லூரியின் தலைமையாசிரியராகப்
பொறுப்பேற்றார்.

கரந்தை தமிழ்ச் சங்கத் திலிருந்து 1925-இல் ‘தமிழ்ப் பொழில்’ இதழ் வெளியானது. அதன்
பொழிற்றொண்டர் (இதழாசிரியர்) பொறுப்பை இவர் ஏற்றார். 1932-இல் இவ்விரு
பொறுப்புகளிலிருந்து விலகி, 1932 முதல் 1942 வரை திருவையாறு அரசர் கல்லூரியில்
பேராசிரியராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றார். அதன் பின் 1942 முதல் 1946 வரை
கரந்தைப் புலவர் கல்லூரியின் துணை முதல்வர் ஆனார்.

1945-இல் கரந்தைக் கவியரசரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. 16.12.1953-இல் இயற்கை
எய்தினார்.