வ.வே.சு.ஐயர்

வ.வே.சு.ஐயர்

Profession அறிஞர்

Biography

திருச்சி, வரகநேரி வேங்கடேச ஐயர் – காமாட்சி அம்மாள் தம்பதியருக்கு 02.04.1881-இல்
பிறந்தார்.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1894-இல் எஃப்.ஏ. படித்தார். படிக்கும்போதே அத்தை
மகள் பாக்கியலட்சுமியைத் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்குப் பின் 1899-இல்
பி.ஏ. பட்டம் பெற்றார்.

சென்னை சட்டக் கல்லூரி யில் பி.எல். பட்டம் பெற்று 1901 முதல் திருச்சி நீதிமன்றத்தில்
வக்கீலாகப் பணியாற்றினார். 1907-இல் லண்டன் சென்று லிங்கன் சட்டக் கல்லூரியில் பார்-அட்-லா
படிப்பில் சேர்ந்தார். இக்காலகட்டத்தில் இந்தியாவில் நிலவிய சூழல் காரணமாக புரட்சியாளராக
மாறினார். தாம் பெற்ற பாரிஸ்டர் பட்டத்தைத் தூக்கி எறிந்தார்.

1908-இல் காந்தியடிகள் லண்டன் மாநகருக்கு வந்தபோது அவரை வ.வே.சு. சந்தித்தார்.
இருவரும் அவரவர் கொள்கைகளை வலியுறுத்தி விவாதித்தனர். இறுதியில் இரு வரும் அவரவர்
வழிதான் சிறந்தது என்று விடை பெற்றனர்.

சாக்சன் துரை கொலையின் எதிர்வினையாக வ.வே.சு.வைக் கைது செய்ய போலீசார் வந்தனர்.
அப்போது தாடி வளர்த்திருந்த வ.வே.சு.வை அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாமையால்
தப்பினார்.

லண்டனில் இருந்து பாரிஸ் நகருக்குச் சென்றார். அங்கிருந்து முஸ்லிம் போல மாறுவேடம் பூண்டு
மக்கா நகர் சென்று, அங்கிருந்து கொழும்புக்குச் சென்று சில நாட்களுக்குப் பின்னர்
புதுச்சேரிக்கு வந்து மாறு வேடத்தைக் கலைந்தார். மனைவியும் புதுச்சேரிக்கு வந்தார்.

இருவரும் புதுவையிலேயே இல்லறம் நடத்தினர். இவர்களுக்கு சுபத்திரை எனும் ஒரு மகளும்,
கிருஷ்ணமூர்த்தி எனும் ஒரு மகனும் பிறந்தனர்.

பாரிஸில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் நிபுணத்துவம் பெற்றிருந்த வ.வே.சு.விடம்
அரவிந்த கோஷ், பாரதியார், வாஞ்சிநாதன் (கலெக்டர் ஆஷைக் கொன்றவர்) போன்றவர்கள் துப்பாக்கிச்
சுடும் பயிற்சியைப் பெற்றனர்.

‘தேசபக்தன்’ இதழில் வெளியான தலையங்கப் பிரச்சினையால் 1921-இல் 9 மாதங்கள் பெல்லாரி
சிறையில் அடைக்கப்பட்டு 1922-இல் விடுதலையான பின் 1923-இல் சேரன்மாதேவியில் ‘தமிழ்க்
குருகுலம்’, ‘பரத்வாஜ் ஆசிரமம்’ தொடங்கி மாணவர்களுக்குத் தொழிற்கல்வியும், அறிவுக்
கல்வியும் வழங்கினார்.

ஆசிரமப் பிரச்சனை, சமபந்தி விரோதம், பெல் லாரி சிறைவாசம், தேசபக்தன் பத்திரிகை மூடி
விட்டதால் ஏற்பட்ட வருமான இழப்பு போன் றவை இவரை வறுமையின் கோரப்படியில் சிக்க வைத்தன.
எனினும் அவர் கலங்கவில்லை.

இந்நிலையில் 3.6.1925 அன்று வ.வே.சு. தனது மகள் சுபத்திரை, மகன் கிருஷ்ணமூர்த்தியோடு
அம்பாசமுத்திரம் அருவி காணச் சென்றபோது மகள் சுபத்திரை அருவியில் கால் வழுக்கி விழ,
அதிர்ச்சி அடைந்த வ.வே.சு. காப்பாற்றும் முயற்சியில் தோற்றுப் போய் தனது 44-ஆம் வயதில்
இருவரும் அமரத்துவம் எய்தினர்.

மூன்றாம் நாள் இவரது உடல் கல்லிடுக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. அர்ப்பணிப்பு மிகுந்த
இவருடைய வாழ்க்கையை சுத்தானந்த பாரதியார் ‘வீரவிளக்கு’ எனும் நூலை 1947-இல்
வெளியிட்டுப் பெருமைப் படுத்தினார்.