சி.கே.சுப்பிரமணிய முதலியார்

சி.கே.சுப்பிரமணிய முதலியார்

Profession அறிஞர்

Biography

கோவை, திருப்பேரூர் கந்தசாமி முதலியார் – வடிவம்மை இணையருக்கு 20.02.1878-இல்
பிறந்தார்.

கோவையில் இடைநிலைக் கல்லூரிப் படிப்பை முடித்து, 1898-இல் மேற்படிப்புக்காக தனது
தாயாருடன் சென்னைக்குச் சென்று அரசினர் மாநிலக் கல்லூரியில் பி.ஏ. தத்துவம் படித்தார்.
தமிழில் சென்னை மாநிலத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று ‘பிராங்க்லின்’ தங்கப்பதக்கம்
பெற்றார். அப்பொற்பதக்கத்தை திருப்பேரூர்த் திருக்கோயில் குடமுழுக்கின்போது பட்டிப்
பெருமானுக்கு காணிக்கை அளித்து விட்டார்.

1898-இல் சேலம் கங்கை வல்லி ஜமீன்தார் கனகசபாபதி முதலியாரின் மகள் மீனாட்சியைத் திருமணம்
முடித்தார். இருபது ஆண்டுகள் இல்லறம் நடத்தி 1916-இல் துணைவியார் இறைவனடி அடைந்தார்.
இதன்பின் துணைவியின் உறவினராகிய மீனாட்சியம்மாளை இரண்டாவது திருமணம்
செய்துவைக்கப்பட்டார்.

1903-இல் சட்டம் முடித்து, 1903-51 காலகட்டத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
கோவையில் பரவிய நச்சுக்காய்ச்சலால் ஊர் மக்கள் வெளியேறியதால் இவரும் கோவையை அடுத்த
இராமநாதபுரத்தில் ஓர் இல்லத்தைக் கட்டி வழக்கறிஞர் தொழிலை நடத்தினார்.

கோவைச் சிறையில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் செக்கிழுத்தும் கல்லுடைத்தும்
பல்வேறு கொடுமைகளுக் குள்ளானபோது அதை அம்பலப்படுத்தி நீதிமன்ற விசாரணக்குக் கொண்டு
வந்தார். வ.உ.சி.யை அவ்வப்போது சந்தித்து உதவிகள் செய்தார். அவர் சிறையிலிருந்து
வெளிவந்தவுடன் கோவை பேரூரில் குடியமர்த்தி உதவினார்.

சிவக்கவிமணி சிவானந்த வடிவமாகவே வாழ்ந் தவர். அவரது மனைவி 1958-இல் காலமான பிறகு
பிறவி சார்ந்த எந்த உறவுகளும் அவருக்கு இல்லாமல் போனது. பின்னாளில் ‘பித்தன் ஒருவனின்
சுயசரிதம்’ என்ற நூலை எழுதினார்.

‘சேக்கிழார் செம்மணித்திரள்’ என்ற நூலை வெளியிட்டு சாகித்திய அகாதமியின் பாராட்டைப்
பெற்றார். பின்னர் பல்வேறு இடங்களில் தாம் சொற்பொழிவாற்றிய குறிப்புகளைத் தொகுத்து
‘சேக்கிழாரும் சேயிழையார்களும்’ எனும் நூலாக்கினார். நமது நிறைவுக்காலத்தில் இறுதி
விருப்பங்களைப் பட்டிப்பெருமானுக்குத் தெரிவிக்கும் விதமாக ‘பேரூர் பட்டிப்பெருமான்
இரட்டை மணிமாலை’ என்ற நூலை இயற்றினார். இடையில் வந்த தொண்டை மண்டல ஆதீனப் பட்டத்தை
ஏற்றுக்கொள்ளத் தவிர்த்தார்.

அவரது இறுதி விருப்பப்படி பேரூர் தலத்திலுள்ள ‘பாலறாவாயர் மன்றம்’ இல்லத்திற்கு
அழைத்துச் சென்றனர். 24.01.1961 அன்று பன்னூரு அடியார்கள் திருவாசகம் ஓத அமைதியாக
நிறைவு அடைந்தார். திருப்பேரூர் பட்டிவிநாயகர் ஆலயத்தின் பின்புறம் உள்ள அவரது நிலத்தில்
சமாதி வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் தை பரணி நாண்மீனன்று சிவக்கவிமணியின் குருபூசை
அவரது சமாதியில் நடத்தப்பெற்று அடியார்களுக்கு அன்னம் பாலிக்கப் பெறுகிறது.