சோழவந்தான் அரசஞ்சண்முகனார்

சோழவந்தான் அரசஞ்சண்முகனார்

Profession அறிஞர்

Biography

மதுரை, சோழவந்தான் அரசப்பிள்ளை – பார்வதியம் மாள் தம்பதியருக்கு 15.9.1868 அன்று
பிறந்தார் அரசஞ் சண்முகனார். இயற்பெயர் சண்முகம்.

ஐந்து வயதில் திண்ணைப்பள்ளி ஆசிரியர் அழகர்சாமியிடம் கல்விப் பயிலத் தொடங்கினார்.

13-ஆம் வயதில் ‘சிதம்பர விநாயகர் மாலை’ எனும் முதல் நூலை இயற்றத் தொடங்கினார்.

16-ஆம் வயதில் தந்தை கால மானார். 18-ஆம்வயதில் சோழ வந்தான் சித்த மருத்துவர் மகள்
காளியம்மையை மணந்தார்.

1890-இல், 22-வது வயதில் மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியர் பணியில் சேர்ந்து 12
ஆண்டுகள் பணியாற்றினார்.

தமிழ்ச் சங்கங்கள் மற்றும் தமிழக ஊர்களில் நடக்கும் தமிழ் விழாக்களில் தலைமை ஏற்றும்
பங்கேற்றும் சிறப்பித்தார். இடையிடையே நூலாராய்ச்சியும் செய்து வந்தார். மதுரை தமிழ்ச்
சங்கம் தொடங்கிய நாள் முதல் தம் இறுதிக் காலம் வரையிலும் அதனுடன் தொடர்பு கொண்டிருந்தார்.

திருமயிலை சண்முகம் பிள்ளையும் இதே காலகட்டத்தில் எழுதி வந்ததால் பெயர் குழப்பம்
ஏற்படக்கூடாது என்பதற்காக தந்தையார் பெயரிலுள்ள அரசன் என்பதை தன் பெயருக்கு முன் னால்
இணைத்து அரசஞ் சண்முகம் ஆனார்.

சிதம்பரம் வியாசர் மாலை, மதுரை மீனாட்சியம்மை திருவடிப்பத்து, ஏகபாத நூற்றந்தாதி,
மாலைமாற்று மாலை, மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடி மாலை ஆகிய பக்திப் பனுவல்
களையும், சில ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார்.

இருபதாம் நூற்றாண்டில் கட்டளைக் கலித்துறையில் தோன்றிய நிகண்டு நூல்கள் அரசஞ்சண்முகனாரின்
நவமணிக்காரிகை, இராம சுப்பிரமணிய நாவலரின் தமிழுரிச்சொல் பனுவல் என்பன
மட்டுமேயாகும்.

அரசஞ்சண்முகனாரின் ‘இசை நுணுக்கச் சிற்றுரை’, ‘நவமணிக்காரிகை’, ‘பஞ்சதந்திர வெண்பா’,
‘மதுரைச் சிலேடை வெண்பா’, ‘முருகக் கடவுள் கலம்பகம்’ மட்டுமல்லாது அவ்வப்போது எழுதிய
தனிப்பாக்களும் இன்னும் அச்சேறாமல் உள்ளன.

உடல் நலக் குறைபாடு ஏற்பட்ட நிலையிலும் ‘தொல்காப்பியப் பாயிரவிருத்தி’ உரை எழுத
இரவும் பகலும் பல நூல்களைப் படித்து எழுதி முடித்தார். தமிழோடும் வறுமையோடும் பிணி
யோடும் வாழ்ந்த சண்முகனார் தம் 47-ஆம் வயதில் 11.01.1915-இல் இயற்கை எய்தினர்.

மறைமலை அடிகளார் தன் நாட்குறிப்பில், ‘தமிழுலகம் உண்மையிலேயே ஒரு பெரிய கல்விமானை
இழந்துவிட்டது. அவருடைய இடத்தை நிரப்புவது மிகக்கடினம்’ என்று குறிப் பிட்டுள்ளார்.
சோழவந்தானில் அவரது முழு உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.