| Profession | எழுத்தாளர் |
|---|
இன்றைய சென்னையின் ஒரு பகுதியான பெரம்பூரில் திருவேங்கடப்பள்ளை என்பவரின் மகனாக
ஆனந்தரங்கப் பிள்ளை பிறந்தார். பின்னர் இவரது தந்தை தனது மைத்துனர் நைனியாப் பிள்ளையின்
வேண்டுகோளுக்கிணங்க குடும்பத்துடன் புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்தார்.
ஆனந்தரங்கர் தனது 18-ஆம் வயதில் பிரெஞ்சு ஆளுநர் லெனுவாவுடன் தொடர்பை ஏற்படுத்திக்
கொண்டு அவரது நம்பிக்கைக்குரியவர் ஆனார். 03.07.1744-இல் ஆனந்தரங்கர் பல்லக்கில்
செல்லவும், விளக்குகளை ஏந்திச் செல்லும் சேவகர் களை வைத்துக் கொள்ளவும் துய்ப்ளேவினால்
அனுமதிக்கப் பட்டார். இவரை தலைமை துவிபாசாக 1749-இன் தொடக்கத்தில் துய்ப்ளே
நியமித்திருக்க வேண்டும். ஆனால், துய்ப்ளேயின் மனைவியும், வேறு சிலரும் கிறித்துவரல்லாத
ஆனந்தரங்கருக்கு இத்தகைய உயர் பதவியைத் தருவதை எதிர்த்தனர். மற்றொரு சமயம், ஆனந்தரங்கர்
கிறித்துவராக மதம் மாறினால் பதவியைக் கொடுப்பதாகக் கூறியபோது ஆனந்தரங்கர் அதை
வன்மையாக மறுத்ததாகவும் அறிகிறோம்.
1753-இல் துய்ப்ளே மனைவியின் தூண்டு தலால் ஆனந்தரங்கரின் அதிகாரங்கள் முற்றிலும்
பறிக்கப்பட்டன. (பிரெஞ்சு, தெலுங்கு மொழிகளில் திறன் பெற்றிருந்த ஆனந்தரங்கர், பாரசீக
மொழியிலும்கூட ஓரளவு தேர்ச்சி பெற்றிருந்தவராக அறியப்படுகிறார்.)
இத்தகைய சூழலில் ஆனந்தரங்கரின் உடல் நலம் குன்றியது. தனக்கான வரி வசூலைக் கூட அவரால்
வசூலிக்க முடியவில்லை. 12.01.1761-இல் உயிர் நீத்தார்.
உலக வரலாற்றில் நாட்குறிப்பின் அடிப் படையில் முழுமையான பிரெஞ்சு காலனி யாதிக்க
வரலாற்றின் முக்கிய பகுதியாகக் கருதப் படும் துய்ப்ளேவின் காலம் உள்ளிட்ட ஐம்பதாண்டு கால
எழுச்சியும் வீழ்ச்சியும் பதிவு செய்யப்பட்ட பெட்டகமாக அமைவது ஆனந்தரங்கப் பிள்ளையின்
நாட்குறிப்புகளாகும்.
துய்ப்ளேயின் அரசியல் ஆலோசகராகவும், தலைமை துவிபாசியாகவும், பன்மொழி வித்தக ராகவும்,
தமிழர்களின் ஆளுநராகவும், தமிழர்களின் நீதிபதியாகவும், வணிகத்தை வழிநடத்து பவராகவும்,
இராசரீக உறவுகளை வழி நடத்துப வராகவும் அமைந்து விழுமிய வாழ்க்கைக்குச் சொந்தமானவர்.
இவரது அயராத உழைப்பும், நுண்மதியும், சமயோசிதமும், நடைமுறை சார்ந்த முடிவுகளும்
இவரது நாட்குறிப்பின் மூலம் தெளிவாகத் தெரிகின்றன.
பிரெஞ்சுக் காலனியாதிக்கத்தின் கதாநாயகனாகப் போற்றப்படும் துய்ப்ளே கால நிகழ்வுகள்
உள்ளிட்ட பல செய்திகளையும் ஒரு நேர்முகப் பார்வையாளராக 06.09.1736 முதல் 11.11.1761
வரை இருபத்தாறு ஆண்டுகளுக்கான செய்திகளை இவரது இயல்பான பார்வையில் பதிவு
செய்துள்ளார். வெளியுலகப் பார்வைக்கென எழுதாமல் தனது அந்தரங்கக் குறிப்புகளாக
எழுதப்பட்டுள்ளதே இந்நாட்குறிப்பின் நம்பகத் தன்மையை வலுப்படுத்துகின்றன.