| Profession | சமய அறிஞர் |
|---|
காஞ்சியில், 400 ஆண்டுகளுக்கு முன்பு சைவ வேளாண் குலத்தினருக்கு தீட்சா குருவாய்
விளங்கிய குமாரசாமி தேசிகரின் மகனாக கி.பி. 17ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ சிவப்பிரகாசர்
தோன்றினார்.
சிவப்பிரகாசர் தம் தம்பியருடன் திருவண்ணாமலைக்குச் சென்று குருதேவரை வழிபட்டு, அங்கேயே
தங்கியிருந்து தமது கல்வியைக் கற்றார். அவ்வமயம் அண்ணாமலையாரைப் போற்றி ‘சோண சைலமாலை’
இயற்றினார். பின்னர் திருச்செந்தூர் ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோயிலில் ‘திருச்செந்தில்
நீரோட்டகயமக அந்தாதி’ என்னும் நூலைப் பாடினார்.
திருவெங்கனூர் திருவெங்கை நாதரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு ‘திருவெங்கைக்
கோவை’யையும், பழமலை நாதருக்காக ‘திருவெங்கைக் கலம்பகம்’, ‘திருவெங்கை உலா’ ஆகிய
நூல்களையும் இயற்றினார். மேலும் ‘திருவெங்கை அலங்காரம்’, ‘சிவப்பிரகாச விகாசம்’ எனும்
நூல்களையும், தமிழில் தருக்க நூற் புலமை பெறுவதற்காக ‘தருக்க பரிபாஷை’ நூலையும்,
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோரைப்
போற்றித் துதிக்கும் வகையில் ‘நால்வர் மணிமாலை’யையும் இயற்றியுள்ளார். கொற்றவன்குடி
உமாபதி சிவாசாரியார் வட மொழியில் செய்த ‘சதரத்ன சங்கிரகம்’ என்னும் நூலினை ‘சதமணி
மாலை’ எனத் தமிழாக்கினார்.
சிவப்பிரகாசர் முதன் முதலாக ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகளைத் தரிசனம் செய்ய பொம்ம புரம்
(பொம்மையம்பாளையம்) சென்றபோது, கையுறையாக ‘ஸ்ரீ சரிஞான பாலய சுவாமிகள் நெஞ்சுவிடு
தூது’ பாடினார்.
சிவப்பிரகாசர் சிவஞானியிடம் ஞானோப தேசம் பெற்று முதன்மைச் சீடரானார். அவரிடம் அறிந்த
தத்துவ நுண்பொருள்களை ‘சிவஞான பாலய தேசிகர் தாலாட்டு’ எனும் நூலாகப் பாடியதுடன்,
சிவஞானியைப் பிள்ளை யாகப் பாவித்து ‘ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத்தமிழ்’ என்ற
நூலையும் பாடினார். இவ்வாறாக சைவ, வீரசைவ நெறிகளையும், அந்நெறி நின்று வாழ்ந்த
அடியார்களையும் போற்றிப் பாடினார். சமயம், தத்துவம், புராணம், சிற்றிலக்கியம் சார்ந்த 34
நூல்களைப் படைத்துள்ளார்.
கிறித்துவ சமயத்தைத் தமிழகத்தில் பரப்ப வந்த இராபர்ட் டி.நொபிலி, தம் மதக் கொள் கையை
ஏற்றுக் கொள்ளும்படியாக தருக்கம் செய்தபோது, அதற்கு எதிராக ‘ஏசு மத நிகாரணம்’ என்னும்
ஒரு நூலை அருளினார்.
நல்லாற்றூரில் ஆதினத் திருமடத்தில் இருந்து கொண்டு சிவநாம மகிமையும், இட்டலிங்கப்
பெருமான் மீது அபிஷேக மாலையும், இட்ட லிங்க நெடுங்கழிநெடிலும், இட்டலிங்கக் குறுங்
கழிநெடிலும், நிரஞ்சனமாலையும், கைத்தல மாலையும் சீகாளத்திப் புராணத்தில் கண்ணப்பச்
சருக்கமும், நக்கீரன் சருக்கமும் செய்தருளி, சிவநுபவச் செல்வராய் வாழ்ந்திருந்து, 32-ஆம்
வயதில், புரட்டாசி மாதத்தில் பௌர்ணமித் திதியில், சிவயோக சமாதி கூடியருளினார்.