| Profession | எழுத்தாளர் |
|---|
திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூரில், சவரிமுத்துப் பிள்ளை – ஆரோக்கிய மாரியம்மாள்
தம்பதியருக்கு 1826இல் பிறந்தார்.
11-ஆவது வயது வரையில் குளத்தூரிலேயே தந்தையிடமே தமிழ்க் கல்வியைக் கற்றார். திருச்சி
நீதிமன்றத்தின் மொழி பெயர்ப்பாளர் தியாகப்பிள்ளையிடம் ஆங்கிலம் கற்றார்.
இவர் கல்வி கற்கும் காலத்தில், தனது அன்பிற்குரிய அடைக்கலம் பிள்ளையைப் பற்றி எழுதிய
செய்யுளே முதல் படைப்பு எனப்படுகிறது.
22-வது வயதில், திருசிரபுரம் நீதிமன்றத்தின் தலைவரான கார்டன் என்ற ஆங்கிலேயர் இவரது
திறமையை அறிந்து ‘ரிகார்டு கீப்பர்’ வேலையில் அமர்த்தினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்
திருச்சிராப் பள்ளி ஜில்லா நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் வேலை கிடைத்தது. அங்கு
வாக்குமூலப் பத்திரங்கள் காணாமல் போன விவகாரத்தில் இவர் வேலையை இழக்க வேண்டியதாயிற்று.
போராடி மீண்டும் அவ்வேலையைப் பெற்றார். அதன்பின், தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ‘முன்சீப்’
ஆனார். பிறகு, சீர்காழிக்கு முன் சீப்பாக மாற்றப்பட்டார். அதன்பின் 1860-இல் மாயூரத்திற்கு
மாற்றப்பட்டு 13 ஆண்டுகள் பணி யாற்றினார். 1872இல் 100 ரூபாய் மாத உபகாரச் சம்பளத்துடன்
பணியிலிருந்து விலகினார். மாயூரம் நகரசபைத் தலைவராகச் செயலாற்றினார்.
செய்யுள் இயற்றுவதில் உள்ள ஆர்வம் காரணமாக, பல வகையான செய்யுள்களை பாடும் திறன்
வேதநாயகம் பிள்ளைக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டிருந்தது. ஆகையால், கும்மிப்பாட்டு,
நலுங்குப்பாட்டு, பொம்மைக் கலியாணப்பாட்டு போன்ற எளிதான தமிழ்ப் பாடல்களை எழுதினார்.
வேடிக்கையான பாடல்களைப் புனையும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.
அதேபோல, தம் உள்ளத்தில் தோன்றிய பல நீதிகளை அவ்வப்போது எளிய பொருளில் இனிய பாடல்களாக
எழுதி வைத்திருந்தார். இப் பாடல்கள் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிறப்பு
பாயிரத்துடன் ‘நீதிநூல்’ எனும் பெயரில் 1858-இல் வெளியானது.
வேதநாயகர் மாயூரத்தில் இருந்தபோது இசைப்புலவர் கோபால கிருஷ்ண பாரதியுடன் நட்பு
ஏற்பட்டது. அப்போது தமிழ்க் கீர்த்தனை கள் எழுதினார். அவை 1878இல் ‘சர்வ சமய சமரசக்
கீர்த்தனைகள்’ எனும் நூலாக வெளி வந்தது. 1889-இல் ‘சத்திய வேதக் கீர்த்தனை’ எனும் நூலை
எழுதி வெளியிட்டார்.
ஓய்வு பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால், உரைநடையிலும் சில பரிசோதனை
முயற்சிகளை மேற்கொண்டார். பெண்கல்வி, பெண்மானம், ‘பெண்மதிமாலை’ ஆகிய சிறு நூல்களை
வெளிட்டார்.
இவருக்கு நிலையான புகழைத் தேடித் தந்த தமிழின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார்
சரித்திரம்’ 1878-இல் வெளிவந்தது.
அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டு 21.07.1889-இல் காலமானார்.