Dr. S. Senthamizh Pavai

முனைவா். சே. செந்தமிழ்ப்பாவை

Profession பேராசிரியர்

Biography

கோடி கொடுத்த கொடைஞன், குடியிருந்த வீடும் கொடுத்த விழுச்செல்வன் வள்ளல் அழகப்பரின் நிறுவனமாகிய காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநராகப் பணியாற்றும் பேராசிரியர் சே.செந்தமிழ்ப்பாவை எம்.ஏ., எம்.பில், பி.எட்., பிஎச்.டி., பயின்றவர். இவர் தேனி மாவட்டம், போடி வட்டத்தில் அம்மாபட்டி என்னும் சிற்றூரில் 17.03.1968-இல் பிறந்தவர். சில்லமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியையும் காணரக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் இலக்கிய இளவல் (பி.லிட்.,) கல்வியையும் பயின்றவர். இலக்கிய இளவல் பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் இலக்கணப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றமைக்காக வெள்ளிப்பதக்கம் பெற்றவர். இவர்தம் முதுகலை (எம்.ஏ..) ஆய்வியல் நிறைஞர் (எம்ஃபில்) முனைவர் பட்டம் (பிஎச்.டி.) போன்ற மேல்நிலைக்கல்விகள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் அமைந்தன.
முதுகலையில் பல்கலைக்கழக முதல் தரமும் தங்கப் பதக்கமும் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தில் பல்கலைக்கழக முதல் தரமும் பெற்ற சிறப்புக்குரியவர். 1995-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பணியில் சேர்ந்து 31 ஆண்டுகள் பணி அனுபவம் உடைய இப்பேராசிரியர் சங்கப் பாடல்களில் மரபு மாற்றங்கள், வல்லமை தந்துவிட்டாய், செம்மொழிச் சிந்தனைகள், பேராசிரியர்,இராம.இராமநாதன், தமிழ்ப்பண்பாட்டில் தொன்மங்கள், பெண்ணிற்பெருந்தக்கார், இந்திய விடுதலை வேள்வியில் அறியப்படாத தேசபக்தர் பி. எஸ். வசந்தன் என்னும் ஏழு நூல்களும் இலக்கணம், இலக்கியம் தொடர்பாக 221 திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவரைப்பற்றி பேராசிரியை.சே.செந்தமிழ்ப்பாவையின் தமிழ்ப்பணி என்னும் பெயரில் என்னும் பெயரில் நூல் ஒன்றும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவர்களின் நெறிகாட்டுதலின் கீழ் 30 பேர் முனைவர் பட்டமும், நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றுள்ளனர். மூவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதுகலைத் தமிழும் கோயிற்கலையும் பயின்றதால் முதுகலை மாணவர்களைக் கோயிலாய்வில் ஈடுபடச்செய்து தமிழகத்திலுள்ள அரிய பல கோயில்களின் வரலாற்றைத் தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்படி ஆவணப்படுத்தீயுள்ளாா். இவர் தமது ஆய்வுக் கட்டுரைகளுக்காக எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், ‘ஆர்’ ஆராய்ச்சி அமைப்பு. கம்பன் கழகம், தமிழ்சக்தி ஆய்வு மன்றம், பாரதிதாசன் தமிழ்ப் பேரவை போன்ற அமைப்புகளிலிருந்து பல்வேறு பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றுள்ளார்.
தம் ஆய்வுப்பொருள் தொடர்பாகத் (செம்மொழி இலக்கியம்) திருச்சி, சென்னை வானொலிகளில் உரை நிகழ்த்தியதோடு சிறுகதைகள், கவிதைகள் எழுதித் தம்மை ஒரு படைப்பாளராகவும் வெளிப்படுத்திய சிறப்புக்குரியவர்.
எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டில் தமிழ் பயிற்று மொழியாகும் போது ஏற்படும் சிக்கலைத் தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை எடுத்துரைத்தமைக்காகத் தமிழக முதல்வர் டாக்டர் ஜெ.ஜெயலலிதா அவர்களிடமிருந்தும், (1995) செம்மொழி இலக்கியங்களில் ஆய்வு செய்தமைக்காக இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. பிரணாப்முகர்ஜி அவர்களிடமிருந்தும் (இளம் ஆய்வியல் அறிஞர் 21.12.2012) பாராட்டும் விருதும் பெற்றவர். தமது ஆய்வுக் கட்டுரைகளுக்காக அறிவாளர் தி.பெரியார் சாக்ரடீசு சிறப்பு விருது, ஆய்வுலகச் சிற்பி, ஆய்வுலக அறிஞர், சாதனை மகளிர் விருது, 2016-ஆம் ஆண்டின் சிறப்புத்தகுதியாளார் விருது மார்ட்டின் நிறுவனம் வழங்கிய வளரும் தலைமுறைக்காக முன்மாதிரி விருது, தமிழ் சக்தி விருது, சிறந்த மகளிர் விருது, தொல்காப்பியர் விருது, சமூக கல்விச் சிந்தனையாளர் பாராட்டு விருது, ஆய்வுச் சுடர் விருது, சிறந்த நூலகப் பயன்பாட்டாளர் விருது, டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது, தங்க மங்கை விருது, கம்பன் விருது. ஆளுமைப் பதிப்பாசிரியர் விருது, கல்விச்செம்மல் விருது, பாரதி சுடரொளி விருது, சமூக ஈடுபாட்டு விருது, சிறந்த கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான விருது, மனிதநேய மாண்பாளர் விருது என்பன போன்ற விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வ.சுப. மாணிக்கனாரால் துவங்கப்பெற்ற காரைக்குடி தமிழ்ச் சங்கத்தின் தலைவர், செயலர் போன்ற பொறுப்புகளில் பணியாற்றித் தற்பொழுது பொருளாளராக உள்ளார். தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக ஆண்டு தோறும் சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த இரண்டாம் வகுப்பு முதல் பதினோராம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆத்திசூடி முதல் நீதி நெறிவிளக்கம் வரையுள்ள அறநூல்களை விலையின்றி வழங்கி அறநூல் ஒப்பித்தல் போட்டிகள் நடத்தி இளஞ்சிறார்களை அறத்தின் வழி ஆற்றுப்படுத்தும் பணியைச் செய்து வருகின்றார்.
பல்வேறு கல்வி நிறுவனங்களில் சொற்பொழிவுகள், அறக்கட்டளைப்பொழிவுகள் நிகழ்த்தியதோடு தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்திய அனுபவம் உடையவர். அழகப்பா பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.லிட்., எம்.ஏ., பயிலும் மாணவர்களுக்காக தமிழக வரலாறு, திருக்கோயிலமைப்பும் திருவுருவ அமைதியும் பண்டை இலக்கியம், அறஇலக்கியங்களும் சமய இலக்கியங்களும், இலக்கணம் என்பன போன்ற எட்டுப் பாடநூல்கள் இவரால் எழுதப் பெற்றுள்ளமை சுட்டத்தக்கது. மேலும் கோயிற் களஞ்சியம் ஒன்றையும் உருவாக்கும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த் துறையிலிருந்து வெளியாகும் ‘ஆதிச்சம்’ தமிழ்ப்பண்பாட்டு மையத்திலிருந்து வெளியாகும் ‘வேரும் விழுதும்’ ‘தேமதுரம்’ ஆகிய இதழ்களுக்குப் பதிப்பாசிரியாராகவும் விளங்கி இதழாசிரியர் என்னும் பணியைத் திறம்பட ஆற்றி வரும் இப்பேராசிாியா் எழுதிய ‘பெண்மனம்’ என்னும் சிறுகதை கனடா நாட்டு இதழான திண்ணையில் வெளிவந்துள்ளது. மேலும் ‘வல்லமை தந்துவிட்டாய்’ என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் இளங்கலைக்கும் (2011 முதல்) பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரியான தேசியக் கல்லூரியின் இளங்கலைக்கும் (2013 முதல்) பாடமாக வைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்திடமிருந்து நிதிநல்கை பெற்று ‘செம்மொழி இலக்கியத் தொன்மங்கள் சமூக பண்பாட்டியல் ஆய்வு’ என்னும் தலைப்பில் ஆய்வுத் திட்டத்தை நிறைவு செய்துள்ளர்.
w.w.w.thamizh aaivu.blog.spot என்னும் பெயரில் வலைத்தளம் (8.12.2009 முதல்) உருவாக்கி அதில் ‘ஆழ்கடல் முத்துக்கள்’ என்னும் தலைப்பில் அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஆகியவற்றில் நிகழ்த்தப்பெற்ற எம்.பில்., முனைவர் பட்டங்களுக்குரிய ஆய்வுத் தலைப்புகள், ஆய்வாளர், இயல்பகுப்பு போன்றவற்றையும், அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை துவங்கிய 1985 முதல் 2015 வரை முதுகலைப் பட்டத்திற்கு மாணவர்கள் தேர்ந்தெடுத்த கோயிலாய்வுத் தலைப்புகள் முழுவதையும் ஆண்டு வாரியாகத் தொகுத்து இவ்வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பெற்ற தமிழாய்வுகள் அனைத்தும் இவ்வலைத்தளத்தில் வெளியிடப்பட உள்ளன. உலக அளவில் தமிழாய்வு குறித்த முதல் வலைத்தளமாகவும் ஒரே வலைத்தளமாகவும் இவர் உருவாக்கிய வலைத்தளமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வலைத்தளத்தை ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளைச் சார்ந்த ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு தமிழாய்வு பற்றி அறிந்துள்ளமை தமிழாய்வின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இவர்தம் கொடையாகும்.
இங்ஙனம் தமிழாய்வுப் பணிமட்டுமின்றி அழகப்பாபல்கலைக்கழகத்தின் முதுகலைத்தேர்வு முதன்மைக்கண்காணிப்பாளர், பாடத்திட்டக்குழு உறுப்பினர், பாடவல்லுநா்குழு உறுப்பினர், மாணவர் சேர்க்கைக் குழு உறுப்பிர், மாணவர் பகடி வதைத்தடுப்புகுழு உறுப்பினர், பட்டமளிப்பு விழாக் குழு உறுப்பினர், சமவாய்ப்புகள் மைய, இலக்கியக்கழக ஒருங்கிணைப்பாளர் எனப் பல்வேறு நிருவாகப் பணிகளிலும் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள் திறம்படச் செயலாற்றி வருகின்றர். இதுமட்டுமன்றி அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், உமையாள் இராமநாதன் மகளிர் கல்லூரி, கேந்திரிய வித்யாலயா போன்ற கல்வி நிறுவனங்களில் கல்விக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டுவருதல் சுட்டுதற்குரியது.
மேலும் மனிதகுல வரலாற்றில் தாம் பேசும் மொழிக்குக் கோயில் அமைத்து அம்மொழியை அதில் இடம்பெறும் தெய்வமாகக் கருதிப் போற்றும் தமிழினத்தின் பண்பாட்டினைக் கட்டிக்காப்பதற்காக அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பண்பாட்டு மையம் துவங்கப்பட்டு அதன் இயக்குநராக பேரா.சே.செந்தமிழ்ப்பாவை அவர்கள் பொறுப்பேற்றது (திருவள்ளுவராண்டு 2047 தைத்திங்கள் 29-ஆம் நாள்) முதல் தமிழர் தம் பண்பாட்டினை ஆவணப் படுத்தும் செயல்களையும் மேற்கொண்டு வருகிறார்.
தமிழினம் உலகில் தோன்றிய ஆதி குடியாகும். இவ் ஆதிகுடியின் வாழ்க்கை முறை, அதன் மரபுகள், சமூக வழக்கங்கள், ஒழுக்கங்களின் சட்டங்கள், சமூக உறவுகள், ஆன்மீக அறிவார்ந்த கலைத்துறை மனநிலைகளின் முழுமையாகப் பண்பாடு விளங்குகிறது. எனவே ஓரினம் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பெற்ற துய்ப்பின் செறிவாகிய பண்பாட்டைக் காக்கும் விதமாய்ப்பண்டைத்தமிழர் தம் புழங்கு பொருட்கள், வழிபடு பொருட்கள், வேளாண்கருவிகள். தொழிற்கருவிகள், விளையாட்டுக் கருவிகள், இசைக்கருவிகள், உணவுப்பொருட்கள் ஆடைகள், ஓலைச்சுவடிகள் போன்ற பொருட்கள் தமிழகம் முழுவதும் இருந்து சே.செந்தமிழ்ப்பாவை அவர்களால் சேகரிக்கப்பட்டு தமிழ்ப்பண்பாட்டு அருங்காட்சியகம் அமைக்கப்பெற்றுள்ளது. இவ் அருங்காட்சியகத்தை மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு, இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் இந்தியாவின் பிறமாநிலங்கள் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் வருகை புரிந்த பேராசிரியர்கள் மாணவர்கள், தமிழ்ச்சான்றோர், சுற்றுப் பயணிகள் போன்றோர் கண்டுகளித்துப் பாராட்டியுள்ளமை குறிக்கத்தக்கது
தமிழ்ப்பண்டாட்டை வருங்காலச் சமூகம் அறிந்து கொண்டு அதனைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காகப் பல்கலைக்கழகம், கல்லூரிகள் பள்ளிகள் போன்றவற்றிற்கு நேரடியாகச் சென்று தமிழ்ப் பண்பாடு குறித்தும் தமிழர்கள் மண், கல், மரம், இரும்பு, செம்பு ஆகியவற்றின் பயன் அறிந்து அவற்றைத் தம் வாழ்வியலின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தித் தொழில்நுட்பம், அறிதிறன் உடையவர்களாகத் திகழ்ந்தமை தமிழர் தம் பாரம்பரிய உணவுமுறைகள், பழக்க வழக்கங்கள், பண்டைப் புழங்கு பொருட்களைப் பயன்படுத்துவதால் கிட்டும் நன்மை ஆகியவற்றை மாணவர்கட்கு எடுத்துரைத்து விளக்குவதோடு தமிழ்ப்பண்பாடு தொடர்பாகக் கவிதை கட்டுரை, பேச்சு போன்ற போட்டிகளை நடத்தி மாணவர்களை தமிழ்நெறிப்படுத்தும் செயலையும் மேற்கொண்டு வருகிறார். சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய இரு மாவட்டங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் தமிழ்ப்பண்பாட்டின் சிறப்பை அறியச் செய்யும் நோக்கத்துடன்

1. பன்னோக்குப் பர்வையில் தமிழர் பண்பாடு, (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 22.23.10.2016)

2 இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 8.9.09.2017)

3. இருபதாம் நூற்றாண்டில் இந்தியா ஆசியான் கவிஞர்கள், (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 27,2811.2017)
4. அயலகத்தில் தமிழ்ப்பண்பாடு (சுல்தான் இட்ரிசு கல்வியல் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் செம்மூதாய்ப் பதிப்பகம் இணைந்து நடத்திய பன்னாட்டுக்கருத்தரங்கம், மலேசியா, 28.03.2018)
5 .பண்பாட்டுப் பரப்பில் ஆய்வுப் போக்குகள் (பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம் இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம், இலங்கை, 17.10.2018)
6. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் புதின, சிறுகதை ஆசிரியர்கள், (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி திசம்பர் 2018).
7. கற்றல் கற்பித்தல் -நவீன ஆய்வுப் போக்குகள் (சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், உமறுப்புலவர் தமிழ்மொழி அழகப்பா நிலையம் மற்றும் தமிழ்ப்பண்பாட்டு மையம், இணைந்து நடத்திய பன்னாட்டுக் கருத்தரங்கம், சிங்கப்பூர். பல்கலைக்கழகத் 26.05.2019) என்பன போன்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளையும்
8. தமிழ்ப் பண்பாட்டில் கலைகளின் பங்கு, காரைக்குடி 16.12.2016.
9 வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம், கோவிலூர் 25.01.2019.
10 கோயிற் பண்பாடு (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி
(06 122019).

11. காலந்தோறும் தமிழ்ப் பண்பாடு (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 05.03.2020.
12 கோயில் வழிபாட்டு மரபில் பெருந்தெய்வகளும் சிறுதெய்வங்களும் (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 24 & 25.07.2020)
13. மானுடவியல் நோக்கில் சிறுதெய்வ வழிபாடு (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 09.10.2020.)
14. அயலகத்தில் தமிழரும் தமிழ்ப்பண்பாடும் (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 01.12.2020
15 தற்கால இலக்கியங்களில் காலத்தின் சுவடுகள் (அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி 2020.)
16 சந்திரகாந்தம் பன்னாட்டுக் கருத்தரங்கம் (அழகப்பா பல்கலைக்கழகம், 08.10.2021) காரைக்குடி
17. பரதம் மற்றும் இசையில் பாணிகளும் ஜதிகளும், என்னும் பொருண்மையிலான பன்னாட்டுக் கருத்தரங்கம், நுண்கலைத்துறை, அழகப்பா பல்கலைக்கழகம் அக்டோபர் 2022.
18. பன்முக நோக்கில் கவியரசர் கண்ணதாசன் (அழகப்பா 18.07.2025) என்னும் பொருண்மையில் பல்கலைக்கழகம், காரைக்குடி தேசியக் கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார்.
இதுமட்டுமன்றி உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் உறுப்பினராக இருந்து உலகத்தமிழாராய்ச்சி மாநாடுகள் நடத்துவதற்குமேலும் மாணவர்களின் படைப்பாக்கத்திறனை மேம்படுத்துவதற்காக தமிழகமாணவர்களுக்கு (02.03.2017 & 28.8.2018) மட்டுமன்றி ஜம்மு காஷ்மீர் (20.01.2018), மலேசியா (1206.2018), சிங்கப்பூர் (23.10.2018), போன்றவற்றிலிருந்து வருகை புரிந்த மாணவர்களுக்கும் தமிழ்ப்பண்பாடு குறித்த பயிற்சிப் பட்டறையை நடத்தியுள்ளார்.
நல்லாசிரியர், சிறந்தஆய்வாளர், பல்வேறு விருதாளர். இலக்கியப் படைப்பாளர். பாடநூலாசிரியர், பாடமாக வைக்கும் நூல் எழுதிய ஆசிரியர், தமிழர் தம் கலைப் பண்பாட்டைக் கட்டிக்காக்கும் கோயில் ஆய்வர், இளஞ்சிறார்களின் உள்ளத்தில் அறச்சிந்தனையை வளர்க்கும் சமூக நெறிக்காப்பாளர், தமிழ் ஆய்வுப் போக்குகளை தரணியெங்கும் அறியச் செய்யும் வலைப்பதிவர், தமிழராகிய வேரினையும் அவர்தம் பண்பாடாகிய விழுதினையும் ஆவணப்படுத்தும் இதழாசிரியர், தமிழ்ப்பண்பாட்டின் ஆவணக் களஞ்சியக் காப்பாள் என்னும் பல்வேறு தகுதிப்பேற்றிற்கு உரியவராய்ப் பேரா.சே.செந்தமிழ்ப்பாவை திகழ்கிறார்.