M. VEDIYAPPAN

மு.வேடியப்பன்

Profession தமிழ் ஆர்வலர், எழுத்தாளர், பதிப்பாளர்

Biography

சென்னையின் இலக்கிய வாசகர்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான “டிஸ்கவரி புக் பேலஸ்”-ன் நிறுவனர். தமிழ் இலக்கிய உலகில் வாசிப்பு மற்றும் பதிப்பு சார்ந்து டிஸ்கவரி புக் பேலஸ் மூலம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர். பிரபஞ்சன், பூமணி, எஸ்.ராமகிருஷ்ணன், சி.சு.செல்லப்பா, தஞ்சைப் ப்ரகாஷ், வேல ராமமூர்த்தி என மூத்த எழுத்தாளர்களோடு பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகளும் என சுமார் 550 நூல்கள் டிஸ்கவரி பதிப்பகத்தில் இதுவரை வெளியாகியுள்ளது. உலக சினிமாக்களை திரை ஆர்வலர்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கும் விதமாக “அயல் சினிமா” என்ற பத்திரிக்கையினை ஆசிரியராக இருந்து 24 இதழ்களைக் கொண்டு வந்துள்ளார். எழுத்தாளர் முருகேசபாண்டியன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு நிலவெளி என்ற இலக்கிய இதழை சிலகாலம் கொண்டுவந்துள்ளார். இதுவரை ஐந்நூறுக்கும் மேற்பட்ட இலக்கியம் மற்றும் திரைப்பட கருத்தரங்கு நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தியுள்ளார். சிறுகதை எழுத்தாளர்.
எழுத்தாளர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றப்பட வேண்டும் என்று இவர் முன்னெடுத்த எழுத்துலகில் பிரபஞ்சன்-55 நிகழ்வு மூலம், பிரபஞ்சன் அவர்களுக்கு, ஒரு முழுநாள் கருத்தரங்குடன், ரூபாய் 12 லட்சம் பணமுடிப்பும் வழங்கியது, தமிழ் இலக்கிய உலகில் ஒரு மைல் கல்லாகப் பதிவாகியுள்ளது. தமிழ் எழுத்தாளர்கள் வரலாற்றிலேயே முதல்முறையாகப் பிரபஞ்சன் அவர்களின் மறைவையொட்டி புதுச்சேரி அரசாங்கம் 21 குண்டுகள் முழங்க,. இறுதி மரியாதை செலுத்தியதற்கும் எழுத்துலகில் பிரபஞ்சன்-55 என்ற நிகழ்வின் தாக்கமே காரணமாக அமைந்தது. அதேபோல எழுத்தாளர் மொழிபெயர்ப்பாளர் சி.மோகன் அவர்களுக்கும் சமீபத்தில் ரூ.10 லட்சம் பணமுடிப்பு வழங்கியதில் முன்னின்று செயல்பட்டுள்ளார்.
தற்போது சென்னை, கே.கே நகரில் புத்தக நிலையம், தேநீர்கடை, நிகழ்வரங்கம், ஓவியக்கூடம், கலந்துரையாடலுக்கான அறைகள் என முற்றிலும் புதிய வளாகமாக மாற்றி அமைத்து, டிஸ்கவரி புக் பேலஸ் நூல் விற்பனை நிலையம் மற்றூம் பதிப்பகத்தையும் திறம்பட நடத்தி வருவதோடு, சென்னையில் முக்கியமான இலக்கிய அடையாளமாகவே மாற்றி இருக்கிறார். சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த எழுத்தாளர்களான பிரபஞ்சன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோரின் பெயரில் அரங்குகள் அமையப்பட்டுள்ளது. தொடர்ந்து கலை இலக்கியச் செயல்பாடுகளில் தன்னை முழுமையான ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு, வெளியான ‘ரயில்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்.