Sankara Saravanan

சங்கர சரவணன்

Profession தமிழ் ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர், பேராசிரியர், கல்லூரி, தமிழ் அமைப்புகள்

Biography

டாக்டர் சங்கர சரவணன் தமிழ்நாடு அரசு நடத்தும் அகில இந்திய குடிமைப் பணி பயிற்சி மையத்தின் முதல்வராக உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மதிப்புறு ஆலோசகராகவும் உள்ளார். தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மொழிபெயர்ப்புத்திட்டங்கள்,சென்னைப் பன்னாட்டுப் புத்தகத் திருவிழா ஆகியவற்றில் இவரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.இவரெழுதிய15க்கும் மேற்பட்ட நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. பத்தாண்டுகள் விகடன் இயர்புக்கின் மதிப்புறு ஆலோசகராக இருந்து அவற்றின் முழு உருவாக்கத்தில் பெரும்பங்களிப்பு செய்துள்ளார்.அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செந்தமிழ் சிற்பிகள் உரையரங்கம், ரோஜா முத்தையா நூலகத்தில் முனைவர் சங்கர சரவணனின் தமிழ் வெள்ளி ஆகியவற்றில் தமிழ் மொழி-இலக்கிய ஆளுமைகள் குறித்து தொடர் உரைகள் வழங்கிவருகிறார்.வைகறை வாசகன் பதிவுகள் என்று தமிழிலும் Vignettes of Vaikarai Vasakan என்று ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வருபவர். சென்னைப் பன்னாட்டுப் புத்தகத்திருவிழாவுக்காக தமிழ் எழுத்தாளர்களோடு இவர் நடத்திய நேர்காணல்களும் அந்தி மழைக்காக திருக்குறள் ஆளுமைகளோடு இவர் நடத்தும் நேர்காணல்களும் அகில இந்தியக் குடிமைப் பணி பயிற்சி மையத்தின் வலையொலி அலைவரிசைக்காக ஐஏஎஸ் வெற்றியாளர்களோடு இவர் நடத்தும் நேர்காணல்களும் புகழ்பெற்றவை. கால்நடை மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 25 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை உருவாக்கியவர்.2025 ஆம் ஆண்டு நடைபெற்ற இவரது பொன்விழாவின் போது இவரது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் புகழ்மிக்க தமிழ் இலக்கிய ஆளுமைகள் இவர் குறித்து எழுதிய ‘ சுடச்சுடரும் பொன் போல்வர் ‘ எனும் நூல் மூத்த குடிமைப்பணியாளர் ஆர். பாலகிருஷ்ணன், எழுத்தாளர் இமையம், திரையுலக மார்க்கண் டேயர் சிவக்குமார், கவிஞர் நெல்லை ஜெயந்தா மற்றும் இவரது மாண்புமிகு மாணவர்கள் ஆன டாக்டர் வீ.ப. ஜெயசீலன் ஐஏஎஸ், டாக்டர் அலர்மேல் மங்கை ஐஏஎஸ் ஆகியோரால் வெளியிடப்பட்டது. நடிகர் சிவக்குமாரால் ‘திருக்குறள் சரவணன்’ என்றும் கவிப்பேரரசு வைரமுத்துவால் ‘என் சமகால நல்லறிஞர்’ என்றும் ஆர்.பாலகி பாலகிருஷ்ணனால் ‘என் குமரகுரு’ என்றும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி த. உதயச்சந்திரனால் ‘ நண்பர் சங்கர சரவணன் ஓர் அரியவகை உயிரினம்’ என்றும் பாராட்டப்பட்டவர். எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் சிறந்த பேச்சாளர் விருது, அறிவியல் தமிழுக்கான நெல்லை சு.முத்து விருது, ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வழங்கிய மருத்துவச் செம்மல் விருது, கால்நடை மருத்துவ தமிழ்க் கழகத்தின் முன்னவர் விருது உள்ளிட்ட பலவிருதுகளைப்பெற்றுள்ளார்.