| Profession | அறிஞர் |
|---|
புதுச்சேரி, அரியாங்குப்பம் டோல் கேட் கிராமத்தில் கே.கேசவன் – கே.ராஜேஸ்வரி
தம்பதியருக்கு 25.6.1966 அன்று பிறந்தார். நடுத்தர வேளாண் குடும்பம்.
தாகூர் கலைக்கல்லுரியில் (1984 – 87) இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், புதுவை
பல்கலைக்கழகத்தில் (1987-89) முதுகலைத் தமிழ் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்
கல்வியியல், முதுகலை மொழியியல் பட்டங்களும், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி
மையத்தில் மானிடவியல் சான்றிதழ், மானிட வியல் மற்றும் நாட்டுப்புறவியல் பட்டயங்களையும்
பெற்றுள்ளார். க.ப.அறவாணன் நெறியாள்கையில் ‘தமிழ் கல்வி வரலாறு’ என்று தலைப்பில் ஆய்வு
செய்து முனைவர் பட் டமும், 2010- 12இல் புதுவைப் பல்கலைக்கழகத்தில் ‘எடுத்துரைப்பியல்
நோக்கில் சிலப்பதிகாரம்’ என்ற தலைப்பில் ஆய்ந்து பின் முனைவர் பட்டமும் பெற்றார்.
1993- 95இல் சென்னை மொழி அறக்கட்டளையின் தற்காலத் தமிழ் மரபுத் தொடர் அகராதியில்
பணிபுரிந்துள்ளார். 1995- 98இல் புதுவை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில்
விரிவுரையாளரானார். தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 1998 முதல்
தமிழ்நாடு அரசின் கல்லூரிகளில் விரிவு ரையாளராகப் பணிபுரிகிறார். தற்போது இணைப்
பேராசிரியராக அரசு கலைக் கல்லூரி ஒன்றில் பணிபுரிகிறார்.
முதுகலையில் முதன்மை பெற்றதற்காக 1989-இல் அன்றைய துணை குடியரசுத் தலைவர் சங்கர் தயாள்
சர்மாவிடம் பொற்பதக்கத்தையும், ‘கல்வி வரலாறு: சில பார்வைகள்’ என்ற கட்டுரை நூலுக்காக
புதுவை அரசின் கம்பன் புகழ் பரிசையும், 2008-இல் பல்கலைக் கழக நல்கைக் குழுவின்
ஆராய்ச்சித் தகைமையர் விருதினையும், 2005-இல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின்
இளம் அறிஞர் விருதை இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் மூலமாகவும் பெற்றுக்
கொண்டார்.
‘தமிழர்தம் குடிப்பழக்கம்’, ‘தமிழர்தம் கல்வி வரலாறு’, ‘கல்வி வரலாறு: சில பார்வைகள்’,
‘கோட்பாட்டியல் திறனாய்வுகள்’, ‘பனுவல் எடுத்துரைப்புத் திறனாய்வு’, ‘சங்க இலக்கிய
பாட்டு மரபும் எழுத்து மரபும்’, ‘கூற்றுக் கோட் பாடும் தமிழ்க் கவிதையியலும்’ ஆகிய ஏழு
ஆய்வு நூல்களையும், ‘கட்டிட மனிதர்கள்’, ‘ஆணியில் தொங்கும் முகம்’ ஆகிய இரு கவிதை
நூல்களையும் எழுதியுள்ளார். 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், 60-க்கும் மேற்பட்ட
பயிலரங்கம் மற்றும் கருத்தரங்குகளில் கருத்துரை வழங்கியுள்ளார். இவரது நெறி காட்டுதலில்
10-க்கும் மேற்பட்டோர் இள முனைவர் பட்டமும், மூவர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.
தனது 32-வது வயதில் திருமணம் செய்து கொண்டார். துணைவியார் இரா.சுனிதா புதுவை
பல்கலைக் கழகத்தில் கணினி உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். சுப.மாநிலா,
சுப.ஆதன் என இரு குழந்தைகள்.