| Profession | எழுத்தாளர் |
|---|
மதுரை கோரிப்பாளையத்தில், சம்சுதீன் – ரகிமா தம்பதியினருக்கு பிறந்தார். இயற்பெயர்
நாசர்.
1982-இல் ‘ஆர்னிகா’ என்றொரு மாதப் பத்திரிகையை ஐந்து இதழ்கள் நடத்தினார். அந்த
ஈடுபாட்டில் ‘ஆர்னிகா நாசர்’ என அரசு கெஜட்டில் பெயர் மாற்றிக் கொண்டார்.
இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக
எம்.ஏ., (சமூகவியல்) எம்ஃபில் (சமூகவியல்), மருத்துவ மேலாண்மை நிர்வாகத்தில் எம்.ஏ.
ஆகிய பட்டங்களையும், வெகுஜன தொடர் புக்கான முதுகலை பட்டயம், மருத்துவ நிர்வாகத்தில்
பட்டயம் ஆகியவற்றையும் பெற்றார். மேலும், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் நீதிமன்ற
தீர்ப்புகளுக்கான மொழிபெயர்ப்புத் தேர்வு, மெடிக்கல் கோட் தேர்வு அக்கவுண்ட் தேர்வுகள்,
யூஜிசி நெட் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளார். சுகாதாரத் துறையில்
பணியாற்றுகிறார்.
பள்ளிப் பருவத்திலேயே வாண்டுமாமா, தமிழ் வாணன் ஆகியோரின் புத்தகங்களை விரும்பிப்
படிப்பார். இந்நூல்களே இவரை எழுத்தாளர் ஆக்கிற்று. இவரது முதல் கதை ‘முதல் வகுப்பு
டிக்கெட்’ ஒரு வாரஇதழில் வெளிவந்தது. பின் னாளில் இவர் பல பரிசுகளைப் பெற்றபோதிலும்,
இவருக்குக் கிடைத்த முதல் பரிசானது, தினமலர் வாரமலர் சிறுகதைப் போட்டியில் தனது ‘ஆறு
பவுண்டு ரோஜாக்குவியல்’ கதைக்காகப் பெற்ற முதல் பரிசு ஆகும். தினமலர் வாரமலரில் இவரது
‘குற்றாலக் கொலை சீசன்’ எனும் முதல் தொடர்கதை வெளியானது. இவரது முதல் நாவலான
‘சுடச்சுட ரத்தம்’ 13.10.1988 மாலைமதியில் வெளியானது.
தன்னை சிறுவயதில் எழுதத் தூண்டிய தமிழ் வாணனின் மகன் லேனா தமிழ்வாணனை ஆசிரியராகக்
கொண்ட ‘கல்கண்டு’ இதழில் பல தொடர் கதைகளையும், ஜி.அசோகனின் ‘க்ரைம் நாவல்’ இதழில் பல
நாவல்களையும் எழுதி பெரும்புகழ் பெற்றார்.
29.10.1993-இல் இவரது பதினாறு புத்தகங்கள் சிதம்பரத்தில் ஒரே மேடையில் வெளியிடப்
பெற்று லிம்கா சாதனை செய்தன. இவரது ‘நீலக்குயிலே கண்ணம்மா’ ஜீ தொலைக்காட்சி யில்
தொடராக ஒளிபரப்பப்பட்டது.
17.01.2010-இல், மகள் ஜாஸ்மின் திருமணம், இவருடைய திருக்குர்ஆன் நீதிக்கதைகள் வெளியீட்டு
விழா, வெள்ளி விழா மலர் ஆகிய முப்பெரும் விழாவாக நடந்தது.
இவரது ஏராளமான படைப்புகளை மணி மேகலை, வானதி, நக்கீரன், ஜீயே, நேஷனல் போன்ற
பதிப்பகங்கள் புத்தகங்களாக வெளி யிட்டுள்ளன.
இவரது எழுத்துப் பணிக்கு இவரது மனைவி வகிதா, மிகவும் உறுதுணையாக உள்ளார்.
இவரது படைப்புகளை ஆய்வு செய்து ஒருவர் இளம் முனைவர் பட்டமும், மூவர் முனைவர் பட்டமும்
பெற்றுள்ளனர்.