| Profession | அறிஞர் |
|---|
சிதம்பரம் புவனகிரியில் 10.08.1962 இல் பிறந்தார். இவருடைய தந்தை சென்னையில்
இரயில்வேயில் பணிபுரிந்ததால் சென்னையில் குடியேறினர்.
வடசென்னையிலுள்ள பாரதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் புகுமுக (அறிவியல்) கல்வியும்,
வேதியியல் பாடப் பிரிவில் பட்டப் படிப்பும், இராணிமேரி கல்லூரியில் தமிழில் முதுகலைப்
பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழக மொழித்துறையில் முனைவர் மா.செல்வராசன் நெறியாள்
கையில்’அண்ணாவின் படைப்புகளில் மகளிர்’ என்ற தலைப்பில் இளமுனைவர் பட்டமும், முனைவர்
அ.அ.மணவாளன் நெறியாள்கையில் ‘தமிழிலக்கியத்தில் மூப்பும் இறப்பும்’ என்ற தலைப்பில்
முனைவர் பட்டமும் பெற்றார்.
இந்நிலையில், சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முனைவர் பொற்கோவின்
மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்ற முனைவர் நிக்கி கிருட்டிணமூர்த்தியை திருமணம்
செய்துகொண்டார்.
சென்னை ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தில் துணைப் பதிப்பாசிரியர் பணியில் சேர்ந்தார். நடுவண்
அரசின் பணிவாய்ப்புத் தேர்வாணை யம் நடத்திய கல்லூரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு
பெற்று, காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கல்லூரியில் பணியில் சேர்ந்து
இணைப்பேராசிரியராக உயர்ந்து நிறை வெய்தும் நிலையில் பணியில் வெள்ளிவிழா கண்டார்.
இவர் 100-க்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்குகள் மற்றும் தேசிய கருத்தரங்குகளில்
பங்கேற்று ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். 2010-இல் ஆசிய மகளிர் மேம்பாட்டுக் கழகமும்
கலைஞன் பதிப்பகமும் இணைந்து சிங்கப்பூர் டின்டேல் கல்லூரியில் நடத்திய ‘இன்றைய வாழ்வில்
இலக்கியம்’ என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கிலும், இந்திய அளவில் வாரணாசி, ரிஷிகேஷ்,
புதுதில்லி போன்ற இடங்களில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்குகளிலும் பங்கேற்று
ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினார்.
இதுவரை 5 திறனாய்வு நூல்கள், 2 புதினங் கள், 4 கவிதைத் தொகுதிகள், 2 சிறுகதைத்
தொகுதிகள், 1 நாடகம், 1 தொகுப்பு நூல் என மொத்தம் 15 நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது
127 ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு ஆய்வுக் கோவைகளில் இடம்பெற்றுள்ளன.
இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் வ.தி.சங்கரலிங்கம் மீனாட்சி அம்மாள்
அறக்கட்டளையின் சிறந்த நூல்களுக் கான பரிசினை ‘இலக்கியச் சாரலில்’ (2009), ‘அதிகாரப்
பூச்சிகள்’ (2013), ‘பெண்களின் கதை’ (2014) ஆகிய நூல்களுக்காகப் பெற்றுள்ளார்.
‘பெண்களின் கதை’ (2013) நூலுக்கு புதுவை அரசின் கம்பன் புகழ் இலக்கிய விருது,
திருவை யாறு தமிழய்யா கல்விக் கழகம் 2009இல் வழங்கிய ‘ஔவை’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட
விருதுகளைப் பெற்றுள்ளார்.