மு.முத்துவேலு

மு.முத்துவேலு

Profession அறிஞர்

Biography

மதுரை சிலைமலைப்பட்டி முனி யப்பன் – முத்தரசியம்மாள் தம்பதியருக்கு 10.03.1961 இல்
மு.முத்துவேலு பிறந்தார்.

சென்னை இலயோலா கல்லூரியில் பி.ஏ. பட்டமும் முதல் மாணவர் தேர்ச்சிக்கான தங்கப் பதக்கமும்
பெற்றார்.

சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் எம்.ஏ. பட்டமும், ‘சட்டத்தமிழ்’ எனும் தலைப்பில்
ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். பி.எல். எனும் சட்டவியல் பட்டமும் பெற்றார்.
மேலும் ‘இதழி யல்’,’ஆட்சித்தமிழ்’ ஆகியவற்றில் சான்றிதழ், பட்டயம் பெற்றார்.

பின்னர் வேலூர் முத்துரங்கம் அரசுக் கலைக் கல்லூரியிலும், சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக்
கல்லூரியிலும், சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணியாற்றினார்.

இவர் எழுதிய நூல்கள் ‘சட்டத்தமிழ்’ (முனைவர் பட்ட ஆய்வு), ‘சங்கத் தமிழ் கூறும்
சட்டநெறி’, ‘இலக்கியங்களில் சட்ட நெறிகள்’, ‘வள்ளுவர் தொடுக்கும் வினாக்கள்’,
‘செம்மொழிச்சிந்தனைகள்’, ‘வளர்தமிழ்ச் சிந்தனைகள்’, ‘ஆட்சித் தமிழ் வரலாற்று நோக்கு’,
‘மோதிரக் கனவு’ (சிறுகதைத் தொகுப்பு), ‘குறுந்தொகை இன்பம்’, ‘காற்றில் மலர்ந்தவை’
என்பனவாகும். 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார்.

இதழாசிரியராக,’சட்டக்கதிர்’ (ஆலோசனைக் குழு உறுப்பினர்), ‘அறிவியல் பூங்கா’ (துணை
ஆசிரியர்) ஆகியவற்றில் பணியாற்றியுள்ள இவர், ‘தமிழ் அகராதி’, தமிழ் இணையக் கல்விக்
கழகத்தின் ‘சட்டச் சொல் அகராதி’, ஆனந்த விகடன் ‘சொற்களஞ்சியம்’, ‘தமிழ் ஆட்சிச் சொல்
அகராதி’, தமிழ் வளர்ச்சித் துறையின் நூல்கள் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

திருக்குறளைப் போற்றுவதோடு, திருவள்ளு வரின் கருத்துகளை, அறிவு நுட்பத்தை மேடை களில்
முழங்குவதுடன், அதனை எல்லோரும் அறிந்துகொள்ளும் விதத்தில் தொடர்ந்து பேசி யும் எழுதியும்
வந்துள்ள இவரது திருக்குறள் பணியைப் பாராட்டி ‘திருக்குறள் மாமணி’, ‘திருக் குறள்
ஞாயிறு’ ஆகிய பட்டங்களை வழங்கப் பெற்றுள்ளார்.

இவரது ‘சட்டத்தமிழ்’ என்னும் ஆய்வு நூல் சிறந்த நூலுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி
உதவியைப் பெற்றுள்ளது.

தன்னை முதன்மைப்படுத்திக் கொள்ளாது, எங்கும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாது அரிய பல
பணிகளை, ஆழ்ந்தகன்ற நுண்ணறி வால் வெளிப்படுத்தி வந்துள்ள தமிழறிஞர்களில் முனைவர்
மு.முத்துவேலு தலைசிறந்தவர்.