பேராசிரியர் அ.சிவபெருமாள்

பேராசிரியர் அ.சிவபெருமாள்

Profession அறிஞர்

Biography

தஞ்சை கரந்தையில் அடிகளாசிரியர் -சம்பத்து அம்மாள் தம்பதியருக்கு 29.11.60 இல்
பிறந்தார்.

ஆத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கல்வியையும், 1978-இல் புத்தனாம்பட்டி நேரு
நினைவுக் கல்லூரியில் புகுமுக வகுப்பையும் முடித்தார்.

1981-இல் வட சென்னிமலை அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் இளங்கலை (பி.ஏ.)
வரலாறு, முதுகலைத் தமிழ் (எம்.ஏ.), 1988-இல் அண்ணாமலைப் பல்கலை அஞ்சல் வழியில்
ஆசிரியப் பயிற்சி (பி.எட்.), சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் (எம்ஃபில்),
1993-இல் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் முனைவர் (பிஎச்.டி) பட்டம் ஆகியவற்றை
வழங்கப் பெற்றுள்ளார்.

தனது சகோதரியின் மகளான மதுரம் என்கிற மகேஸ்வரியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்
இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். இவர்களுக்கு விநாயகி, சண்முகதேவி என இரு
பெண் குழந்தைகள்.

1989-இல் பாண்டிச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் மணிக்கு 20 ரூபாய் சம்பளத்தில்
வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் தமிழியல் துறை ஆராய்ச்சிப்
பிரிவில் ஆராய்ச்சி உதவியாளரானார். 1999-இல் விரிவுரையாளராகவும், 2004-இல் தேர்வு
நிலை விரிவுரையாளராகவும், 2005-இல் இணைப் பேராசிரியராகவும், 2011-இல்
பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். இன்றுவரை அப்பணியை நேரிய வழியிலும், சீரிய
முறையிலும், பல்கலைக்கழகத்தார் பாராட்டும் வகையிலும் பணியாற்றினார்.

அ.சிவபெருமாள் அவர்கள் நூலாசிரியராக 16, உரையாசிரியராக 6, பதிப்பாசிரியராக 28,
இணையாசிரியராக 3 என 53 நூல்களை வெளி யிட்டுள்ளார்.

சோதிடக் கலையில் வல்லுநரான இவருக்கு 1990, 91, 92 ஆகிய மூன்று ஆண்டுகள் சென்னை தங்கக்
கடற்கரையில் நடைபெற்ற அகில உலக முதலாம், இரண்டாம், மூன்றாம் சோதிட மாநாடுகளில்
முறையே ‘சோதிட ரத்னம்’, ‘நவக் கிரக ரத்னம்’, ‘சோதிட மார்த்தாண்டன்’ ஆகிய பட்டங்கள்
வழங்கப்பட்டன.

1992-இல் புதுவை சோதிட ஆராய்ச்சி மையம் இவருக்கு ‘சோதிட பிதாமகன்’ பட்டம் வழங்கியது.
மேலும் ‘சிவநெறித் திருத்தொண்டர்’, ‘சிறந்த ஆராய்ச்சியாளர்’, ‘தொல்காப்பியச் செம்மல்’,
ஆசிரியச் செம்மல்’, ‘வாரியார் விருது’ போன்ற விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

குகையூரில் உள்ள கயிலாய நாதர் கோயிலை பழுது நீக்கி குடமுழுக்கு செய்துள்ளார். இவ்வாறு
பல நூறு கோயில்களை பழுது நீக்கி குடமுழுக்கு செய்ய வேண்டும் என்பது இவரது விருப்பமாக
உள்ளது.