| Profession | எழுத்தாளர் |
|---|
சேலத்தில் ஏ.பார்த்தசாரதி -பா. இந்திரா தம்பதியருக்கு 13.11. 1958 அன்று பிறந்தார்.
இயற்பெயர் சௌந்தர்ராஜன்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் பி.ஏ.பட்டம் பெற்று, டி.வி.எஸ்.
நிறுவனத்தில் பணி.
‘சிகரம்’ இதழில் பா. செயப் பிரகாசம் எழுதிய ‘இருளுக்கு இழுப்பவர்கள்’ கதையைப் படித்து
அந்தத் தாக்கத்தில் கதை எழுதத் தொடங்கினார்.
தனது பெயருக்கு முன் தாயின் பெயரையும் இணைத்து ‘இந்திரா சௌந்தர்ராஜன்’ எனும் பெயரில்
எழுதுகிறார்.
1978-இல் இவர் எழுதிய ‘ஒன்றின் நிறம் இரண்டு’ எனும் முதல் குறுநாவல் ‘கலைமகள்’ இதழின்
அமரர் ராமரத்தினம் நினைவு குறுநாவல் போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. 1988-இல்
‘அமுத சுரபி’ இதழின் குறுநாவல் போட்டியில் முதல் பரிசைப் பெற்றார்.
1980-களின் தொடக்கத்தில் அதிகமாக மர்ம மாத நாவல்கள் வெளி வந்து கொண்டிருந்தன. அதனால்
இவரும் மர்ம நாவல்கள் எழுதத் தொடங்கினார். ஆனந்த விகடனில் ‘கோட்டை புரத்து வீடு’ என்றொரு
மர்மத் தொடரை எழுதினார். இவரது ‘ரகசியமான ஒரு ரகசியம்’ மர்மத் தொடர் சன்
தொலைக்காட்சியில் ‘மர்மதேசம்’, ‘விடாது கருப்பு’, சொர்ணரேகை, மாயவேட்டை,
கிருஷ்ணதாசி, என்பெயர் ரங்கநாயகி, மீனாட்சி, சிவமயம், ருத்ர வீணை என 45க்கும் மேற்பட்ட
இவரது தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகி யுள்ளன.
‘விக்ரமா விக்ரமா’ எனும் நாவல் தெலுங்கிலும், ‘ரத்னகிரி ரகசியம்’ என்ற நாவல் கன்னட
தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகின. ‘ஜீவா என் ஜீவா’, ‘கோட்டைபுரத்து வீடு’ ஆகிய இரு
நாவல்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ‘கிருஷ்ண தந்திரம்’ கன்னடத்தில்
மொழிபெயர்க்கப்பட்டு ‘தரங்கா’ இதழில் வெளி வந்தது.
‘ஸ்ருங்காரம்’, ‘ஆனந்தபுரத்து வீடு’ ஆகிய இரு திரைப்படங்களுக்குத் திரைக்கதை வசனம்
எழுதியுள்ளார்.
இதுவரை 300 மாத நாவல்கள், 120 தொடர் கதைகள், 800 சிறுகதைகள் எழுதியுள்ளார். 136
நாவல்கள், 12 சிறுகதைத் தொகுதிகள் என 147 படைப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன.
தமிழக அரசு, கலைமகள், அமுதசுரபி, இலக்கியச் சிந்தனை மயிலாப்பூர் அகாடமி, லில்லி
தேவசிகாமணி ஆகிய அமைப்புகளின் விருது களைப் பெற்றிருப்பதுடன், 2010-இல் ஸ்ரீ காஞ்சி
காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் அவர்கள்
‘எழுத்துலகச் சிற்பி’ எனும் விருதினை வழங்கி யுள்ளார்.