பேராசிரியர் பி.கே.மனோகரன்

பேராசிரியர் பி.கே.மனோகரன்

Profession அறிஞர்

Biography

வேலூர் வாணியம்பாடி பெத்தூர் கிருஷ்ணன் – சரோஜா தம்பதியருக்கு 15.4.1957-இல்
பிறந்தார்.

வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் பி.ஏ., சென்னை புதுக் கல்லூரியில் எம்.ஏ.,
காமராசர் பல்கலைக் கழக அஞ்சல் வழியில் பி.எட். ஆகிய பட்டங்களைப் பெற்றார். தட்டச்சில்
முதுநிலை தேர்ச்சி பெற்றறார்.

அடையாறு மயிலைக் கற்பகவல்லி பள்ளியில் ஆசிரியர் பணியேற்ற இவர், கோவை சி.பி.எம்.
கல்லூரியில் 1983-இல் பொருளாதாரத் துறையில் உதவிப் பேராசிரியர் ஆனார். நாட்டுநலப்
பணித் திட்டத்தின் திட்ட அலுவலராகவும் 12 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் பாரதியார்
பல்கலைக் கழகத்தில் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளராக உயர்வு பெற்றார். பல்கலைக்
கழக முதன்மையராகவும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும் பதவி உயர்வு
பெற்றார்.

1987-இல் திருமணம். துணைவி கோமளா. இவர்களுக்கு கே.எம்.மோனிகா என்றொரு மகள்,
கே.எம்.கார்த்திகேயன் என்றொரு மகன்.

தன்னம்பிக்கை, நினைவில் நிற்பவை, வரலாறு, சுற்றுச்சூழல், உலகநடப்பு ஆகிய துறை சார்ந்த
(சில ஆங்கில நூல்கள் உட்பட) 13 நூல்களை எழுதியுள்ளார். சில நூல்கள் தொலைதூரக் கல்வி
பயிலும் மாணவர்களுக்கு சென்னை, பாரதியார், அண்ணாமலை ஆகிய பல்கலைக் கழகங்களிலும் ராஜீவ்
காந்தி தேசிய நிறுவனத் திலும், கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, பொள்ளாச்சி
என்.ஜி.எம். கல்லூரி ஆகியவற்றிலும் பாட நூல்களாக இடம் பெற்றுள்ளன.

25 எம்.ஃபில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆய்வு நெறியாளராக செயல்பட்டுள்ளார். 60-க்கும்
அதிகமான கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
யு.ஜி.சி. கல்வியாளர் கல்லூரிக் கருத்தாளராக 75 அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். பாரதியார்
பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 75 முறை சிறப்பு விருந்தினராக கலந்து
கொண்டு உரையாற்றியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் மீளாய்வுக் குழு, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தில்
தேர்வுக்குழு, பெரியார் பல்கலைக் கழகத்தில் வினாத்தாள் மீளாய்வு குழு, ஆர்.வி. எஸ்,
ஜி.வி.ஜி மற்றும் எஸ்.என்.ஆர். கல்லூரி களின் பாடத்திட்டக்குழு ஆகியவற்றில் உறுப்பினராக
பணியாற்றியுள்ளார்.

இவரது பணிகளைப் பாராட்டி பாரதியார் பல்கலைக்கழக விருது, தமிழக அரசின் நாட்டு நலப்
பணித் திட்ட அலுவலர் விருது, நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் விருது, சிறந்த
ஆசிரியர் விருது, சாதனா டாக்டர் பார்மர் பல்கலைக்கழகத்தின் சிறந்த சாதனையாளர் விருது,
கோவை நேரு கல்வி அறக்கட்டளையின் வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றை அளிக்கப்
பெற்றுள்ளார்.