| Profession | அறிஞர் |
|---|
கேரள இடுக்கி மாவட்டத்திலுள்ள சீந்தலூர் எஸ்டேட் (வாழ்வாதாரத்திற்காக தமிழகத்திலிருந்து
வந்து குடியேறிய பகுதி) மலைப் பகுதியில் வசித்த சுப்பையா-வள்ளியம்மை தம்பதியருக்கு
16.01.1957 அன்று பிறந்தார்.
ஸ்காட் கிறித்தவ கல்லூரியில் புகுமுக வகுப்பில் தமிழை விருப்பப் பாடமாகவும்,
பொருளாதாரத்தை சிறப்புப் பாட மாகவும் எடுத்துப் படித்து முதல் மாணவனாகத் தேறினார்.
அதே கல்லூரியில் இளங் கலை (பொருளாதாரம்) பட்டம் பெற்று, காரியவட்டம் பல்கலைக் கழகத்தில்
முதுகலை படித்தார். அப்போது மார்க்சிய கருத்துகளால் ஈர்க்கப்பட்டு மாணவர் சங்கத்தில்
செயற்பட்டார்.
கேரள பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் பேரா.சி. சுப்பிரமணி பிள்ளையின் வழிகாட்டுதலில்
‘இடுக்கி மாவட்ட முதுவர் இனப் பழங் குடிகள்: ஓர் ஆய்வு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து
1992-இல் முனைவர் பட்டம் பெற்றார்.
முனைவர் பட்ட ஆய்வின்போதே 1987-இல் இவருக்கு பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில்
விரிவுரையாளர் பணி கிடைத்தது. இரண்டு மாதங்களில் சித்தூர் அரசுக் கல்லூரிக்கு மாறுதல்
கிடைத்தது. 1994-இல் திருவனந்தபுரம் பல்கலைக் கழக கல்லூரியில் பேராசிரியராகவும்,
துறைத் தலைவராகவும் பணியாற்றி, தமது 56-ஆவது வயதில் 2012-இல் பணிநிறைவு பெற்றார்.
பணிநிறைவுக்குப் பின் பன்னாட்டு திராவிட மொழியியற் பள்ளியில் மேல்நிலை ஆய்வாளராக
சேர்ந்தார். தற்போது ‘தெக்கன் பாட்டுகள் வழி அறியலாகும் வரலாறு, பண்பாடு மற்றும்
மொழியியல் செய்திகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார்.
இவருக்கு 22.04.1987 அன்று பி.ஜி.கீதாராணி யுடன் திருமணம் நடைபெற்றது. கணித
ஆசிரியை. காயத்திரி, ஜானு என இரு மகள்கள். கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையில்
வசிக்கின்றனர்.
கேரள மண்ணில் பிறந்து வளர்ந்தாலும், தமிழ் மீது தணியாத பற்று கொண்ட இவரு டைய
படைப்புகளில் இரு மாநில கலாச்சாரப் பாதிப்புகளையும் உணர முடிகிறது. குறிப்பாக,
சிறுவயதிலேயே கண்டும் கேட்டும் வளர்ந்த எஸ்டேட் வாழ்க்கைச் சூழல் இவரது படைப்பு களில்
பிரதிபலிக்கிறது.
இவரது பல நாடகங்கள் திருவனந்தபுரம் வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாகியுள்ளன.
‘எண்ணங்களும் ஏக்கங்களும்’ இவரது 104 கவிதைகளைக் கொண்ட கவிதைத் தொகுதி. 25 கதைகளைக்
கொண்ட ‘சூரியகிரகணம்’ இவரு டைய சிறுகதைத் தொகுதி. பல்வேறு இதழ்களில் வெளிவந்த 13
கட்டுரைகளைத் தொகுத்து ‘மொழியும் பண்பாடும்’ எனும் நூலாக வெளியிட்டுள்ளார். முனைவர்
பட்ட ஆய்வேடு ‘முதுவர் இன பழங்குடியினர்’ எனும் நூலாகவும், மேலும் ‘புதுமைப்பித்தன்,
வைக்கம் முகமது பஷீர் சிறுகதைகளில் நகையுணர்வு’ எனும் ஆய்வு நூலும் வெளிவந்துள்ளன.