| Profession | எழுத்தாளர் |
|---|
திருநெல்வேலி செங்கோட்டை விசுவநாதபுரத்தில் நா.செய்யது மசூது – செ.காசினம்மாள் பீவி
தம்பதியருக்கு 01.09.1954 அன்று பிறந்தார்.
விஸ்வநாதபுரம் எம்.எம். நடுநிலைப் பள்ளியிலும், செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். உயர்நிலைப்
பள்ளியிலும் பள்ளிக் கல்வியை முடித்த இவர், பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி
யில் புகுமுகக் கல்வியையும், அந்நகரிலுள்ள தூய ஜான்ஸ் கல்லூரியில் பி.ஏ., பட்டப்
படிப்பையும், மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் எம்.ஏ. (வரலாறு)
பட்டத்தையும், 1989-இல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ‘இந்திய சுதந்திரப்
போரில் தீவிரவாதம்: மணியாச்சி ஆஷ் கொலை’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.ஃபில்
பட்டத்தையும் பெற்றார். தற்போது ‘தமிழகத்தில் இஸ்லாமியத்தின் வருகையும் அதன் தாக்கமும்’
என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு.
6.4.1986-இல் திருமணம் நடைபெற்றது. இவரது துணைவியார் டாக்டர் திவானி ஜஹானரா.
இவர்களுக்கு நஜாத், சுகைனா என இரு மகள்கள்.
18-ஆவது வயதிலேயே ‘அத்தா என்ற தமிழ்ச் சொல்’ என்ற இவரது கட்டுரை ‘அறமுரசு’
நாளிதழில் வெளிவந்தது. தொடர்ந்து பல்வேறு இஸ்லாமிய இதழ்களிலும், ‘தினமணி’,
‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தமிழ் முரசு’ ஆகிய நாளிதழ் களிலும் இதுவரை 1000-க்கும்
மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரிடமிருந்து இதுவரை 101 நூல்கள் வெளிவந்துள்ளன.
இவர் எழுதிய முதல் நூல் ‘தக்கலை ஞான மாமேதை தென்காசி பீர்முகமது அப்பாவின் சரிதையும்
பாடல்களும்’ என்பதாகும். சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார்
பற்றி மட்டும் 16 நூல்களை எழுதி யுள்ளார். திராவிட இயக்க முன்னோடிகளான
ஏ.வி.பி.ஆசைத்தம்பி, கே.வி.கே.சாமி, சிந்தனைச் சிற்பி சிற்றரசு ஆகியோரின் வாழ்க்கை
வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய ‘விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள்’ (தொகுதி 1) ‘சீதக்காதி
அறக்கட்டளை’யின் முதல் பரிசையும், ‘நிகரற்ற பெருவீரன் மருதநாயகம் கான்சாகிப்’ நூல்
‘உணர்வு’ வார இதழின் முதல் பரிசையும், ‘ஆரியமாயை அகல’ நூல் ‘சங்கொலி’யின் முதல்
பரிசையும் பெற்றது.
‘தமிழ்மாமணி’, ‘தமிழறிஞர்’, ‘வரலாற்று ஆய்வுச் செம்மல்’ ‘ஆய்வறிஞர்’, ‘வரலாற்று
அறிஞர்’, ‘வரலாற்றியல் அறிஞர்’, ‘வ.உ.சி. ஆய் வாளர்’, ‘சமூக நல்லிணக்கக் காவலர்’,
‘வரலாற்று ஆசிரியர்’ போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார். தென்காசியில் நடைபெற்ற இஸ்லாமிய
இலக்கிய கழக மாநாட்டில் இவருக்கு ‘உமறுப் புலவர் விருது’ம் ரூ.50,000 பொற்கிழியும்
வழங்கப்பட்டன.