பேராசிரியர் மா.சா.அறிவுடைநம்பி

பேராசிரியர் மா.சா.அறிவுடைநம்பி

Profession அறிஞர்

Biography

மதுரையில் சாம்பசிவனார் – ச.மனோன் மணி தம்பதியருக்கு 06.08.1954 இல் பிறந்தார்.

தியாகராசர் கல்லூரியில் படித்து 1974-இல் இளநிலை கணிதம் பட்டம் பெற்றார். 1976-இல்
தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் ‘திருநாவுக்கரசர்
தேவாரத் தில் காணப்படும் இலக்கியக் கொள்கைகள்’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்
பெற்றார்.

4.4.1977-இல் (திருநெல்வேலி) கிரிஜாவை சீர்திருத்த திரு மணம் செய்துகொண்டார்.
இத்தம்பதியருக்கு இரண்டு ஆண், ஒரு பெண் என மூன்று பிள்ளைகள்.

தமிழ்ப் பல்கலைக் கழகத் தில் அரிய கையெழுத்துச்சுவடி துறைத் தலைவராக ஆறு ஆண்டுகளும்,
பின்னர் பதிப்புத்துறை இயக்குநராக மூன்று ஆண்டுகளும், பேரவை உறுப்பினராக ஆறு
ஆண்டுகளும் பணிபுரிந்தார். 2005 முதல் புதுவைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார்.

2001 முதல் 2002 வரை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவந்த ‘செய்தி மலர்’ மாத
இதழின் பொறுப்பாசிரியராகவும், 2001 முதல் ‘தமிழ் மாருதம்’ மாத இதழின்
பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார்.

இலக்கியம், சைவம், நுண்கலைகள், சுவடி பதிப்பித்தல், பதிவு செய்தல் ஆகியவை அறிவுடைநம்பி
அவர்கள் ஆய்வு செய்வதற்கு எடுத்துக் கொண்ட சிறப்புப் பாடப்பிரிவுகள்.

இவர்தம் வாழ்நாளில் 25 நூல்களை எழுதி யுள்ளார். இவற்றில் சுவடியியல் தொடர் பானவை 7
நூல்கள். 35 நூல்களைப் பதிப்பித் துள்ளார். நிறைவேற்றிய ஆய்வறிக்கைகள் 5. பல்வேறு
நூல்களுக்கு மதிப்புரைகளும், அணிந்துரைகளும் எழுதியுள்ளார்.

இவரது நெறியாள்கையில் 67 ஆய்வாளர்கள் இளம் முனைவர் (எம்.ஃபில்) பட்டமும், 60 ஆய் வாளர்கள்
முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

புதுவைப் பல்கலைக் கழகம் தொடங்கி தமிழ் நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வரையில் 14
பல்கலைக் கழகங்களில் தேர்வு வல்லுநர் குழு உறுப்பினராகச் செயல்பட்டுள்ளார்.

தமிழக பல்கலைக் கழகங்கள் நடத்திய ஏராளமான ஆய்வரங்கங்களில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை
வாசித்துள்ள இவர், இலங்கையில் நடைபெற்ற மாநாட்டிலும், கருத்தரங்கத்திலும் பங்கேற்றுள்ளார்.

இவருக்கு புதுவை தெய்வச் சேக்கிழார் மன்றம்’ 2008-இல் ‘சைவச்செம்மல்’ எனும் பட்டத்தையும்,
திருவாவடுதுறை ஆதினம் 2009-இல் ‘சைவத் தமிழ்ச் சீராளர்’ விருதையும் வழங்கிச்
சிறப்பித்தன.

02.01.2013 அன்று செம்மொழி ஆய்வு கருத்தரங்கில் பங்கேற்பதற்காக கோவை சென்றவர், அன்றிரவு
தங்கியிருந்த அறையிலேயே காலமானார்.