பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி

பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி

Profession அறிஞர்

Biography

தஞ்சை கும்பகோணம் அம்மா சத்திரத்தில் அ.மகாலிங்கம் படையாட்சியார் – அஞ்சலை தம்பதியருக்கு
21.4.1954 அன்று பிறந்தார்.

அம்மாசத்திரம் ஆரம்பப் பள்ளியிலும், தேப்பெருமாள் நல்லூர் நடுநிலைப் பள்ளியிலும், குடந்தை
சிறியமலர் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் இயற்கை
அறிவியலில் புகுமுகக் கல்வியும், தமிழில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களையும் பெற்றார்.
இரண்டிலும் கல்லூரியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.

சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் முனைவர் பொற்கோ தலைமையில் ‘தொல்காப்பிய மரபியல்
ஓர் ஆய்வு’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து எம்.ஃபில் (1979) பட்டமும், ‘தமிழ்
நாட்டுப்புறக் கதைகள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் (1984)
பெற்றுள்ளார். இதற் கிடையில் 1980-இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பட்ட
மேற்படிப்புச் சுவடியியல் நிறை சான்றிதழ் (1979-80) பயின்றார்.

1977-இல் திருமணம். துணைவி: அரியலூர் பானுமதி. இவர்களுக்கு செந்தமிழ்ச் செல்வி,
அன்பரசி என இரு மகள்கள், மகேந்திரன் என்றொரு மகன்.

1984-இல் இராமநாதபுரம் சேதுபதி அரசினர் கலைக் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப்
பணியில் சேர்ந்தார். விழுப்புரம் அரசினர் கல்லூரி, தஞ்சாவூர் மன்னர் சரபோசி அரசினர்
கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றி, 1992-இல் குடந்தை அரசு (தன்னாட்சி) கலைக் கல்லூரியில்
பணியில் சேர்ந்தார். இக்கல்லூரியில் முழுநேர எம்.ஃபில் தமிழ் வகுப்பைக் கொண்டுவரப்
பாடுபட்டார். 1995-இல் அது சாத்தியமானது. அதே போல முழுநேர முனைவர் பட்ட ஆய்வு மைய
மாகத் தமிழ்த் துறையை ஆக்கினார்கள். ‘கவின் கலை மன்றப் பொறுப்பாசிரியராகப் பெறுப்
பேற்றார்.

‘தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக’ உறுப்பினராக செயலாற்றினார். 1987-இல் நடை
பெற்ற போராட்டத்தில் கைதாகி 15 நாட்கள் திருச்சி மத்திய சிறையில் இருந்தார். 1988-இல்
மீண்டும் போராட்டம் நடத்தியதற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுள் இவரும்
ஒருவர். 2012 முதல் திண்டிவனம் சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராகப்
பணியாற்றி வருகிறார்.

இதுவரை 13 நூல்களை எழுதியுள்ளார். 28 நூல்களைப் பதிப்பித்துள்ளார். பல்வேறு
இதழ்களிலும், மலர்களிலும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது மேற்
பார்வையில் 10 பேர் முனைவர் பட்டமும், 25 பேர் இளமுனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

கண்ணியம் இதழின் ‘நாட்டுப்புற நல்லறிஞர்’ (2000), ‘கண்ணியச் செம்மல்’ (2007), தகடூரான்
தமிழ் அறக்கட்டளையின் ‘ஆய்வு வேந்தர்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.