மேலாண்மை பொன்னுச்சாமி

மேலாண்மை பொன்னுச்சாமி

Profession எழுத்தாளர்

Biography

விருதுநகர் மேலாண்மறைநாடு கிராமத்தில் ச.செல்லச்சாமி- அன்னபாக்கியம் தம்பதியருக்கு
1952-இல் பிறந்தார். விவசாயத் தினக்கூலிகள்.

சிறு வயதிலேயே பெற்றோர் இருவருமே அடுத்தடுத்து இறந்தனர். இவரது தம்பி கரிகாலன்
சிறுகுழந்தை. இருவரையும் பாட்டி அரவணைத்தார்.

5-ஆம்வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, பஞ்சம் பிழைக்க தஞ்சாவூருக்குப் புறப்பட்டார்.
தஞ்சை தெருக்களில் சைக்கிளில் அலைந்து கடலை மிட்டாய் விற்றார். படிப்பு ஆர்வத்தினால்
கையில் கிடைத்த செய்தித்தாள்கள், பொட்டலம் போடும் காகிதங்கள் எல்லாவற்றையும் நேரம்
கிடைக்கும் போதெல்லாம் படித்தார். மார்க்சியர்களின் தொடர்பும் அங்கே கிடைத்தது. அதனால்
தீவிர வாசகர் ஆனார். ஜெயகாந்தனின் ‘யுகசந்தி’ படித்தார். அது அவரைத் தூங்கவிடாமல்
செய்தது. தன் இருப்பையும், உலக நடப்பையும் உணர வைத்தது. ஒரு கதையை எழுதி ‘செம்மலர்’
இதழுக்கு அனுப்பினார். அக்கதை ‘பரிசு’ (1972) எனும் தலைப்பில் வெளிவந்தது. இதுவே
அவரது முதல் கதை. பின்னர் சொந்த ஊருக்குத் திரும்பி பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை
நடத்தினார். 1981-இல் முதல் தொகுப்பு வெளி வரும் அளவுக்கு கதைகள் எழுதினார். எல்லா
முன்னணிப் பத்திரிகைகளிலும் தொடர்ந்து எழுதினார்.

இதுவரை 36 சிறுகதைத்¢ தொகுதிகள், 7 நாவல்கள், 5 குறு நாவல்கள், 1 கட்டுரை நூல்கள்
வெளிவந்துள்ளன.

‘ஜனரஞ்சனி’, ‘கல்கி’, ‘வாசுகி’, ‘தமிழ் அரசி’, ‘இதயம் பேசுகிறது’ நடத்திய
சிறுகதைப் போட்டி களில் முதல் பரிசுகளைப் பெற்றுள்ளார். ‘ஆனந்த விகடன்’ பவளவிழா
முத்திரைச் சிறு கதைகளாக ஆறு கதைகள் தேர்வுபெற்றன. முத்திரைக் கதைகளில் சிறந்ததாக
இவரது கதையே தேர்வானது. ‘இலக்கியச் சிந்தனை’ பரிசை 8 முறை பெற்றார். ‘மின்சாரப்பூ’
புதினத் திற்காக சாகித்ய அகாதமி விருதினை 2008-இல் பெற்றார். தமிழக அரசின் இலக்கிய
விருது உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரது ‘பந்தம்’ சிறுகதை மலேயா, ஆங்கிலம், சீனம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் மலேசிய
அரசினால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ‘இனி’ புதினம் மலையாளத்தில் இரண்டு பதிப்புகள்
கண்டுள்ளன.

5-ஆம் வகுப்பு வரையே படித்த இவரது படைப்புகள் பல்வேறு பள்ளி, கல்லூரி, பல்கலைக்
கழகங்களில் பாடமாக இடம்பெற் றுள்ளன. இவரது படைப்புகளை ஆய்வு செய்து 150-க்கும்
மேற்பட்டவர்கள் எம்.ஃபில் பட்டமும், 32 பேர் முனைவர் பட்டமும் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் தொடக்க காலத்திலிருந்து தம்
இறுதிக் காலம் வரை பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் செயலாற்றினார். 30.12.2017-இல் சென்
னையில் காலமானார்.